8 மாநிலங்களின் கூட்டு பரிந்துரைகள்


8 மாநிலங்களின் கூட்டு பரிந்துரைகள்
x

வரி விகித மாற்றம் குறித்து 3, 4-ந்தேதிகளில் நடக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.

நமது நாட்டில் ஜி.எஸ்.டி. என்று கூறப்படும் சரக்கு சேவை வரி 2017-ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. அதுவரை விற்பனை வரி, மதிப்பீட்டு கூட்டு வரி உள்ளிட்ட பல வரிகளை மாநில அரசுகள் வசூலித்து வந்த நிலையில், ஜி.எஸ்.டி. என்ற ஒரே வரி மற்ற அனைத்து வரிகளுக்கும் மூடு விழாவை நடத்தி விட்டது. ஜி.எஸ்.டி. வருவாயை மத்திய–, மாநில அரசுகள் சரிசமமாக பிரித்துக் கொண்டாலும், மாநில அரசுகள் சுயமாக வரி விதிக்கும் உரிமையை இழந்துவிட்டன. மத்திய நிதி மந்திரி தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் வரி விகிதங்களை முடிவு செய்து வருகிறது.

இப்போது பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தன்று வெளியிட்ட அறிவிப்பில், “மக்கள் இந்த ஆண்டு கொண்டாடும் தீபாவளி ‘இரட்டை தீபாவளி’யாக இருக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விகிதம் சீரமைக்கப்படும். இதனால் பொருட்கள் விலை குறையும்” என்றார். அந்தவகையில், தற்போது இருக்கும் வரி விகிதங்களில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதம் நீக்கப்பட்டு, 5 மற்றும் 18 சதவீத வரி விகிதத்துக்குள் அனைத்து பொருட்களுக்கும் வரி வந்துவிடும். புகையிலை, சிகரெட் மற்றும் ஆடம்பர கார்கள் போன்ற வசதி படைத்தவர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரி விகித மாற்றம் குறித்து 3, 4-ந்தேதிகளில் நடக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.

இந்த வரி விகித சீரமைப்பால் மாநிலங்களுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தை, பா.ஜனதா ஆளாத மாநிலங்களான இமாசல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகம், கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய எட்டு மாநிலங்களின் நிதி மந்திரிகள் ஒன்று கூடி தெரிவித்துள்ளனர். அவர்கள் இந்த வரிசீரமைப்பை மேற்கொள்ளும்போது எடுக்க வேண்டிய சில பரிந்துரைகளை மத்திய அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளனர். அதில், “ஜி.எஸ்.டி. வரி விகித சீரமைப்புக்கு நாங்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதனை செய்வதால் ஒட்டுமொத்தமாக ரூ.85 ஆயிரம் கோடி முதல் ரூ.2 லட்சம் கோடி வரை இழக்கும் நிலை ஏற்படும் என்று நிதி மந்திரிகள் எதிர்பார்க்கிறார்கள். அதன்படி, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வருவாயில் 15 முதல் 20 சதவீதம் வரை இழப்பு ஏற்படும். இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டால் மாநிலங்களால் நிச்சயம் தாங்கி கொள்ளவே முடியாது.

எனவே இந்த இழப்பை மாநில அரசுகளுக்கு முழுமையாக ஈடுகட்டித் தர வேண்டும். சிகரெட், –புகையிலை உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கு விதிக்க திட்டமிடப்பட்டுள்ள 40 சதவீத வரியை இன்னும் அதிகரிக்க வேண்டும். மாநிலங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும். இதுவே கூட்டாட்சி தத்துவத்துக்கு வலுசேர்ப்பதோடு, மாநிலங்களின் நிதி சுயாட்சியையும் பாதுகாக்கும்” என்று அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட இந்த 8 மந்திரிகளும் தெரிவித்த கருத்துக்கள் நியாயமானவை. எனவே மத்திய அரசு இதை கருத்தில் எடுத்துக்கொண்டு, மக்களுக்கும் பயன் இருக்க வேண்டும், அதே நேரத்தில் மாநிலங்களுக்கும் இழப்பு ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் வரி விகிதங்கள் சீரமைப்பு மற்றும் மாநிலங்களுக்கான இழப்பீடு குறித்த நல்ல முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

1 More update

Next Story