டிராகனும் யானையும் ஆடும் ஜோடி நடனம்


டிராகனும் யானையும் ஆடும் ஜோடி நடனம்
x

மோடி மேற்கொண்ட சீன பயணம் இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை வளர்த்து

7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சீன பயணம் இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை வளர்த்து, நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இருந்தது. சீனாவில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் நரேந்திர மோடி அங்கு வருவதற்கு முன்பே அவரது பயணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளும், கட்டுரைகளும் பிரசுரித்தன. குறிப்பாக ‘சவுத் சீனா டெய்லி’ பத்திரிகையில் எழுதப்பட்ட கட்டுரையில் சீனாவின் அடையாளமான டிராகனையும், இந்தியாவின் அடையாளமான யானையையும் குறிப்பிட்டு வித்தியாசமான கோணத்தில் எழுதியிருந்தது.

அதில், ‘சீனா-இந்தியா இடையே நெருக்கடியான காலக்கட்டத்தில் ஏற்பட்டுள்ள அன்பு’ என்ற தலைப்பில் டிரம்ப்பின் வரிவிதிப்பு காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நட்பை குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்தது. தொடக்கத்திலேயே டிராகன்-யானை ஆடும் டாங்கோ என்ற ஜோடி நடனம் டிரம்ப்பின் வரிகளால் ஏற்பட்டுள்ள இருளை அகற்றும் என்று கூறியிருக்கிறது. மேலும், “5 ஆண்டுகளுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தாலும் தீர்க்கப்படாத எல்லை பிரச்சினையை இரு நாடுகளும் ஓரத்தில் தள்ளிவைத்து விட்டு நல்ல உறவை நோக்கி நெருங்கிக்கொண்டு இருக்கின்றன” என்று எழுதப்பட்டு இருந்தது. சீனாவின் வடக்கு துறைமுக நகரான தியான்ஜின்னில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பளம் விரித்து பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒரு கல்லில் இரு மாங்காய் என்பதுபோல இந்த பயணத்தின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும், ரஷிய அதிபர் புதினையும், மோடி சந்தித்து பேசி பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு தலைவர்களுடனும் கை குலுக்கி சிரித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்த படத்தை மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதை பிரசுரித்த ‘சவுத் சீனா டெய்லி’ பத்திரிகை இந்த ஒரு படமே டிரம்ப்புக்கு மோடி ஒரு வலுவான செய்தியை சொல்வதாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தது. மோடியும், ஜி ஜின்பிங்கும் 40 நிமிடம் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை பற்றி ஜி ஜின்பிங் கூறும்போது, “இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகள், போட்டியாளர்கள் அல்ல. இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை எல்லை பிரச்சினைகள் வரையறுக்கக்கூடாது. நாம் நண்பர்கள், பக்கத்து நாட்டுக்காரர்கள். டிராகனும் யானையும் ஒன்றாக உலா வரவேண்டும்” என்று பேசி நட்புறவின் புதிய அத்தியாயத்தை தொடங்கிவைத்தார்.

மோடி பேசும்போது, “பரஸ்பரம், நம்பிக்கை அடிப்படையில் இரு நாடுகளின் உறவையும் முன்னெடுத்து செல்வதில் இந்தியா உறுதியாக உள்ளது” என்று கூறி நட்பின் வாசலை தாராளமாக திறந்துவைத்தார். இதுமட்டுமல்லாமல் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமரை வைத்துக்கொண்டே, மோடி காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை குறிப்பிட்டு, “இது மனிதகுலத்துக்கு விடுக்கப்பட்ட சவால், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு இந்த பயங்கரவாதத்துக்கு துணை நின்றவர்களிடம் இது ஏற்புடையதுதானா? என்று கேள்வி எழுப்பவேண்டும்” என்றார். இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது பாகிஸ்தான் மீது விழுந்த சம்மட்டி அடியாகும். மொத்தத்தில் மோடியின் சீன பயணம் அரசியல் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் பல செய்திகளை உலகுக்கு தெரிவித்துள்ளது.

1 More update

Next Story