எங்கெங்கு காணினும் சக்தியடா

பெண்கள் சமுதாயத்தில் அனைத்து துறைகளிலும் நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறார்கள்
எங்கெங்கு காணினும் சக்தியடா என்று அன்று பாவேந்தர் பாரதிதாசன் முழங்கியதுபோல இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் கோலோச்சுகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி பெண் சக்தி என்று தன்னுடைய அரசு தீட்டும் அனைத்து திட்டங்களிலும் பெண்கள் முன்னேற்றத்தையே முன்னிறுத்துகிறார். அதுபோல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் பதவியேற்ற முதல் நாளிலேயே 'விடியல் பயணம்' என்ற திட்டத்தை அறிவித்து பெண்கள் தினமும் நகர பஸ்களில் இலவசமாக பயணம் மேற்கொள்ள வைத்தார். அதுபோல புதுமைப்பெண் திட்டத்தை கொண்டுவந்து கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை வழங்கிவருகிறார்.
இப்படி பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பெண்களுக்கு பல சலுகைகளை மட்டுமல்லாமல் உரிய அங்கீகாரத்தையும் கொடுத்துவருகிறார்கள். இருவரது ஆட்சியிலும் பெண்கள் பல துறைகளில் மிளிர்கிறார்கள். பஹல்காமில் உள்ள பைசரான் புல்வெளியில் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மதத்தை கேட்டு சுட்டுக்கொன்றதால் உயிரிழந்தவர்களின் மனைவிகள் இழந்த குங்குமத்துக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய முப்படைகளும் நடத்திய துல்லிய தாக்குதலை உலகுக்கு அறிவித்தது கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய ராணுவம், விமானப்படை வீராங்கனைகள்தான். அந்த வீராங்கனைகள் இந்த தாக்குதல் குறித்து கம்பீரமாக விவரித்த பாங்கை கண்டு உலகமே வியந்தது.
இதுபோல ஆபரேஷன் சிந்தூரின்போது எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த உதவி கமாண்டன்ட் நேகா பண்டாரி தலைமையில் 6 வீராங்கனைகள் எல்லையில் உள்ள சியால்கோட் பகுதியில் இருக்கும் 2 நிலைகளை 3 நாட்கள் இரவும், பகலும் காத்ததோடு மட்டுமல்லாமல் எதிரிகளோடு துப்பாக்கி ஏந்தி போரிடவும் செய்தனர். இவர்களின் வீரதீர செயல் எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்தது. 150 மீட்டர் தூரத்தில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் குண்டு மாரி பொழிந்தபோதும், இந்த 7 வீராங்கனைகளும் சற்றும் பயப்படாமல் மிகவும் துணிச்சலோடு பதில் தாக்குதலை மிக வேகமாக நடத்தி எதிரியை பின்வாங்க செய்தனர். இதேபோன்று இந்திய கடற்படையில் அதிகாரிகளாக பணிபுரியும் கேரளாவை சேர்ந்த தில்னா, புதுச்சேரியை சேர்ந்த ரூபா ஆகியோர் ஒரு பாய்மர படகில் 47,450 கிலோ மீட்டர் தூரம் மழை, வெயில், குளிர் என்று பாராமல் 238 நாட்களில் 3 பெருங்கடல்களை கடந்து மிகப்பெரிய சாதனை புரிந்ததோடு மட்டுமல்லாமல், உலகைச்சுற்றி வந்த முதல் சாதனை ஜோடி பெண்கள் என்ற பெருமையையும் பெற்றனர்.
சில நாட்களுக்கு முன்பு தேசிய ராணுவ அகாடமியில் படித்து 17 பெண்கள் பட்டதாரிகளாக முதலாவதாக வெளிவந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் சமீபத்தில் பேரதிர்ச்சியை உருவாக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் மட்டுமல்லாமல் மேலும் 8 பெண்கள் போலீசில் புகார் கொடுத்ததோடு நீதிமன்றத்திலும் துணிச்சலாக சாட்சியம் அளித்தனர். ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கை 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் திறமையாக புலன்விசாரணை செய்தனர். அரசு குற்றவியல் பெண் வக்கீல் இந்த வழக்கில் மிக திறமையாக வாதாடினார். மகளிர் கோர்ட்டு நீதிபதியும் ஒரு பெண். ஆக அனைத்து பெண்களும் சேர்ந்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைக்க செய்தனர். மொத்தத்தில் இப்போது பெண்கள் சமுதாயத்தில் அனைத்து துறைகளிலும் நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறார்கள். தாய்க்குலம் தன்னிகரற்று விளங்குகிறது.