பாலமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர சுவராக அல்ல


பாலமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர சுவராக அல்ல
x

ஆர்.என்.ரவி பேச தொடங்கி சில கருத்துகளை முன்வைத்தபோது அவருக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மத்தியில் ஜனாதிபதியும், மாநிலங்களில் கவர்னர்களும் இருக்கவேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கவர்னர்களுக்கு என்று தனியாக நிர்வாக அதிகாரங்கள் இல்லையென்றாலும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் கடமை இருக்கிறது. இதுதவிர பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பிலும் கவர்னர் இருப்பார். அரசியலமைப்பு சட்டத்தின் 176-வது பிரிவில், ஒவ்வொரு ஆண்டும் முதல் தடவை சட்டசபை கூடும்போது முதல் நாள் மாநில அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையை கவர்னர் வாசிப்பதோடு தொடங்கும் என்று தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் அந்த ஆண்டுக்கான அரசின் கொள்கைகளை விளக்குவதுதான்.

ஆனால் சமீபகாலங்களாக பா.ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசு தயாரிக்கும் உரையை கவர்னர்கள் வாசிக்காமல், சில பகுதிகளை விட்டு வாசிப்பது, தாங்களாகவே சில பகுதிகளை இணைப்பது, உரையை புறக்கணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் சர்ச்சைகள் வெடித்து கிளம்பியுள்ளன. இது தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்து தொடங்கியது. பொதுவாக சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள்தான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால் கவர்னர் உரையை முழுமையாக வாசிக்காமல் 4-வது ஆண்டாக ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்துள்ளார். 2023-ல் அவர் தனது உரையில் சில சொற்களை வாசிக்காததால் எழுந்த சர்ச்சையிலும், 2024-ம் ஆண்டு தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என்றும், கடந்த ஆண்டும் அதே காரணத்தை கூறியும் வெளிநடப்பு செய்தார்.

இந்த ஆண்டு ஆர்.என்.ரவி பேச தொடங்கி சில கருத்துகளை முன்வைத்தபோது அவருக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கவர்னர் சட்டசபையில் இருந்து நடையை கட்டினார். அடுத்த சில நிமிடங்களில் மக்கள் பவனில் இருந்து கவர்னர் தன் உரையை வாசிக்காமல் புறக்கணித்தது ஏன்? என்பதை விளக்கும் 13 காரணங்கள் கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டது. இதேபோல கேரளாவில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தனது உரையில் மத்திய அரசை விமர்சிக்கும் பகுதியை வாசிக்காமல் தவிர்த்துள்ளார். கர்நாடக சட்டசபையிலும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் தனது உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார். கவர்னருக்கும், மாநில அரசுக்கும் ஏற்பட்ட மோதலால் தெலுங்கானாவிலும், மேற்கு வங்காளத்திலும் கவர்னர் உரை இல்லாமலேயே முன்பு கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்கும் என்ற நடைமுறையை நீக்கும் வகையில் சட்டத்தை திருத்தும் முயற்சியை மேற்கொள்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை 35 ஆண்டுகளுக்கு முன்பே, அப்போது ஜனாதிபதியாக இருந்த ஆர்.வெங்கட்ராமனும் முன்வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை, சட்டசபையில் கவர்னர் உரை என்பதெல்லாம் தேவையற்றது. இதெல்லாம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தில் உள்ள நடைமுறைகள். அந்த அர்த்தமற்ற நடைமுறைகள் இங்கிலாந்து நாட்டின் ‘ஹவுஸ் ஆப் காமன்ஸ்’ என்ற மக்களவை நடைமுறையில் இருந்து நமது அரசியல் சட்டத்துக்கு இரவலாக பெறப்பட்டது. எனவே தகுந்த சட்டத்திருத்தம் மூலம் இந்த நடைமுறைகளை நீக்கவேண்டும் என்று பிரதமர்களாக இருந்த ராஜீவ்காந்தியிடமும், சந்திரசேகரிடமும் பரிந்துரைத்தார். இதேபோல ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்று அறிஞர் அண்ணா கூறினார். பொதுவாக கவர்னர்கள் மத்திய அரசின் பிரதிநிதியாகவே இருக்கவேண்டும். அவர்கள் ஆளுங்கட்சியின் பிரதிநிதியல்ல. மொத்தத்தில் மாநில அரசையும், மத்திய அரசையும் இணைக்கும் பாலமாகத்தான் கவர்னர் செயல்படவேண்டுமே தவிர, இருவரையும் பிரிக்கும் சுவராக செயல்படக்கூடாது.

1 More update

Next Story