சீனாவுடன் உறவு மலருமா?

இந்தியா-சீனா இடையே நல்லுறவுக்கான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
நமது அண்டை நாடான சீனாவுடன் சரித்திர காலம் தொட்டே நல்ல வர்த்தக, கலாசார உறவு இருந்தது. அந்த தொடர்புகளின் அடையாளங்களை இன்றும் இரு நாடுகளிலும் பார்க்கலாம். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் 1950-ல் கூட, ‘இந்தி சீனி பாய் பாய்’ என்ற முழக்கமே பிரதமர் நேரு, சீன பிரதமர் சூ என் லாயிடம் இருந்தது. இதற்கு பொருள் இந்தியாவும், சீனாவும் சகோதரர்கள் என்பதாகும். பிற்காலங்களில் அரசியல் காரணங்களால் இருநாடுகளுக்கும் இடையே உரசல்கள் தொடங்கின. எல்லைப்புறங்களில் இருநாட்டு ராணுவத்துக்கும் இருந்த மோதல் 1962-ம் ஆண்டு போராக உருவெடுத்து. அதுவே இருநாடுகளுக்கும் இடையே பகை உணர்வாக மாறியது. ஆனால் அதன்பிறகு உறவில் பெரிய அளவில் விரிசல் இல்லை.
கடந்த 2019-ம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்துக்கு வந்து பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசியது இருநாட்டின் உறவுக்கு அச்சாரமாக இருந்தது. ஆக தமிழ்நாடு இதில் முக்கிய பங்கு வகித்தது. ஆனாலும் இந்த உறவின் மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை, அடுத்த ஆண்டே அதாவது 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15, 16-ந்தேதிகளில் சீனா அருகில் உள்ள இந்திய எல்லைப்பகுதியான கல்வானில், இந்தியா சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன வீரர்கள், இந்திய வீரர்களோடு நடத்திய நேருக்கு நேர் மோதலால் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. அதன்பிறகு சீன இறக்குமதிக்கு இந்தியா பல கட்டுப்பாடுகளை விதித்தது. சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது. அதன்பிறகு இருநாட்டு பரஸ்பர உறவுகளும் கீழ்நிலைக்கு சென்றுவிட்டது.
இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்கா உலக நாடுகள் குறிப்பாக இந்தியா, சீனா மீது தொடங்கிய வர்த்தக போர் இந்தியாவையும், சீனாவையும் நெருக்கத்துக்கு கொண்டுவந்துவிட்டது. இதுமட்டுமல்லாமல் வருகிற 31-ந்தேதி சீனாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள வேண்டும் என்று சீன வெளியுறவு மந்திரி வான் யி இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியை நேரில் அழைத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் நரேந்திரமோடி சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுவருகிறார். மேலும் வான் யி, நமது வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரையும் சந்தித்து பேசியதன் விளைவாக இந்தியா-சீனா இடையே நல்லுறவுக்கான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நேரடி விமான போக்குவரத்து தொடங்கவும், அபூர்வ தாதுக்கள், உரம், சுரங்கங்கள் தோண்டும் எந்திரங்கள் இறக்குமதி செய்யவும் முடிவெடுக்கப்பட்டது. இந்தியா தன்னுடைய செமிகண்டக்டர் மற்றும் அபூர்வ தாதுக்கள் தேவையில் 90 சதவீத இறக்குமதிக்கு சீனாவைத்தான் சார்ந்திருக்கிறது. இதுபோல யூரியா, என்.பி.கே., மற்றும் டி.ஏ.பி. உரத்தேவையும் சீனாவில் இருந்தே பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் எல்லைப்புற பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் பல நடவடிக்கைகள் எடுக்க முடிவுகள் எடுக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடியின் சீன பயணத்துக்கு முன்னோட்டமாக நடந்த இந்த கூட்டத்திலேயே இவ்வளவு நல்ல முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், 2018-க்கு பிறகு இப்போது சீனா செல்லும் பயணம் அதுவும், அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீதம் வரிவிதித்திருக்கிற சூழ்நிலையில், இன்னும் நல்ல வர்த்தக உறவுகளை புதுப்பிக்கும், இரு நாட்டு உறவிலும் மணம் வீசும் உறவு மலரும் என்ற எதிர்பார்ப்பு இந்திய-சீன மக்களிடமும் இருக்கிறது.






