அக்னி வீரர்களுக்கு வேலை வாய்ப்பு

4 ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்யும்போது திறமையுள்ள 25 சதவீதம் பேர் மட்டும் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றமுடியும்.
அக்னிவீரர்களாக பணியாற்றி 4 ஆண்டு பணிக்காலத்தை முடித்தவர்களுக்கு உத்தரபிரதேச மாநில போலீஸ் துறைகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். நாட்டுக்கான பாதுகாப்பு பணியில் அக்னிவீரர்களின் பங்கு மிக முக்கியமானது. கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 14-ந்தேதி பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் முப்படைகளிலும் அக்னிபாத் என்ற திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இதன்படி ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளிலும் பணியாற்ற இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான வயது வரம்பு 17 முதல் 21 வயது வரையாகும். இவர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றமுடியும்.
இவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது அக்னிவீரர்களாக வேலைக்கு சேர்ந்த முதல் ஆண்டில் ரூ.30 ஆயிரமும், இரண்டாவது ஆண்டில் ரூ.33 ஆயிரமும், 3-வது ஆண்டில் ரூ.36 ஆயிரத்து 500-ம், 4-வது ஆண்டில் ரூ.40 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 4 ஆண்டுகள் நிறைவடைந்து அவர்கள் வெளியேறும்போது சேவை நிதி வழங்கப்படும். அதாவது, மாதந்தோறும் அவர்கள் பெறும் சம்பளத்தில் 30 சதவீத தொகை பிடித்தம் செய்யப்பட்டு ஓய்வு பெறும்போது சேவை நிதியாக வழங்கப்படும். இந்த தொகை ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் வரை கிடைக்கும். இதற்கு வருமான வரி கிடையாது. அக்னிவீரருக்கு ரூ.48 லட்சம் ஆயுள் காப்பீடாக வழங்கப்படுகிறது. இதற்கு அவர்கள் சம்பளத்தில் இருந்து பங்களிப்பு செய்யவேண்டியது இல்லை. 4 ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்யும்போது திறமையுள்ள 25 சதவீதம் பேர் மட்டும் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றமுடியும்.
மீதம் உள்ள 75 சதவீதம் பேர் படைகளில் இருந்து வெளியேறி வேறு வேலைகளை தேடிக்கொள்ளவேண்டும். இவர்களுக்கு ராணுவத்தில் ஓய்வூதியம் எதுவும் கிடைக்காது. கடற்படையில் பெண்களும் அக்னிவீரர்களாக சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். அக்னிவீரர்களாக பணியில் சேர்ந்து முதல் 4 ஆண்டுகளை முடித்தவர்கள் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகிறார்கள். தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அக்னிவீரர்களாக பணியாற்றுகிறார்கள். ஓய்வுபெறும் அக்னிவீரர்களை மாநில போலீஸ் படையில் சேர்ப்பதற்கான இடஒதுக்கீட்டு விதிகளை உருவாக்கவேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக அக்னிவீரர்களாக பணியாற்றி 4 ஆண்டுகளை முடித்தவர்களுக்கு 3 ஆண்டுகள் விதிவிலக்குடன் உத்தரபிரதேசத்தில் காவல்துறையில் சேர 20 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல அரியானா, ஒடிசா மாநிலங்களில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. மேலும் ராஜஸ்தான், சிக்கிம், அருணாசலபிரதேசம், உத்தரகாண்ட், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் அக்னிவீரர்கள் அரசுபணிகளில் சேர இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ரெயில்வே போன்ற துறைகளிலும் அக்னிவீரர்களுக்கு இடஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 60 ஆயிரம் அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தென்மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கான தேர்வு தாம்பரம் விமானப்படை நிலையத்தில் நடைபெற்று வருகிறது. அக்னிவீரர்களாக தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களும் நிறையபேர் பணியாற்றுகிறார்கள். அவர்களும் அடுத்த ஆண்டு முதல் தங்கள் பதவிக்காலத்தை முடித்துவிட்டு ஆண்டுதோறும் வெளியே வருவார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த அந்த இளைஞர்களுக்கும் போலீஸ், வனத்துறை உள்ளிட்ட துறைகளிலும், இதர அரசு பணிகளிலும், தனியார் துறைகளிலும் முன்னுரிமை கொடுத்து வேலைவாய்ப்பு தரவேண்டும் என்பது அந்த இளைஞர்களின் கோரிக்கையாக இருக்கிறது.






