ஒரு பக்கம் வலி; மற்றொரு பக்கம் பாடம்!

இந்தியாவைவிட அதிகமாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவை அமெரிக்கா தொடவில்லை.
அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு, டிரம்ப் ஏற்கனவே இருக்கும் வரிகளை விட கூடுதலாக வரிவிதித்தார். இந்தியாவுக்கு முதலில் பரஸ்பர வரி என்று சொல்லி 25 சதவீத வரியை கூடுதலாக அறிவித்தார். தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்கி, மற்ற நாடுகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பதால் கிடைக்கும் வருவாயைத்தான் ரஷியா, உக்ரைன் நாடு உடனான போருக்கு செலவிடுகிறது என்று உப்பு சப்பு இல்லாத காரணங்களை கூறி இப்போது கூடுதலாக 25 சதவீத வரியை விதித்துள்ளார். இவ்வளவுக்கும் அமெரிக்காவும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. இந்தியாவைவிட அதிகமாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவை அமெரிக்கா தொடவில்லை.
இதற்கு அமெரிக்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அதாவது, இந்தியாவை தனிமைப்படுத்தி, அமெரிக்க நலன்களை காயப்படுத்தி, அமெரிக்கா-இந்தியா உறவை டிரம்ப் நாசமாக்குகிறார் என்றும், சீனாவின் மீது ஏன் இதேபோன்ற தடைகள் விதிக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளதால் இந்தியாவின் வர்த்தகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும், நிறைய பேர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த வரி விதிப்பால் ஜவுளி, தோல் பொருட்கள், விலை உயர்ந்த கற்கள், நகைகள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், தரைவிரிப்புகள், வேளாண் பொருட்கள், மீன்கள், ரசாயன பொருட்கள், எந்திரங்களின் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்படும்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் வந்தாரையெல்லாம் வாழவைக்கும் திருப்பூரில் மட்டும் ரூ.3 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் என்று அங்குள்ள தொழிலதிபர்கள் கூறுகிறார்கள். இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்று வெளியே அனுப்பும் நிலை உருவாகியுள்ளது. இதேபோல கோவையில் ரூ.2,500 கோடிக்கு தங்க நகை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் என்று நகை உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆம்பூர், வேலூர் உள்பட பல இடங்களில் உள்ள தோல் பொருட்களின் ஏற்றுமதி பாதிப்பால், அதற்கான பணியில் ஈடுபட்டுள்ள 75 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்படுகிறது. தூத்துக்குடியில் மீன் உள்பட கடல்சார் உணவு பொருட்களின் உற்பத்தி 50 சதவீதம் அளவுக்கும் குறைக்கப்படுகிறது. இந்த தொழிலிலும் வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை இருக்கிறது.
டிரம்ப்பின் இந்த நடவடிக்கை ஒரு பக்கம் வலியை ஏற்படுத்தினாலும் மற்றொரு பக்கம் இதை மத்திய அரசாங்கம் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அமெரிக்கா போனால் என்ன, நாம் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம் என்ற நோக்கில் ஜவுளி தொழிலில் மட்டும் ஏற்றுமதிக்கான வாய்ப்புள்ள 40 நாடுகளை அடையாளம் கண்டு அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் முயற்சிகளை தொடங்கியுள்ளது. இதுபோல தோல் பொருட்கள் ஏற்றுமதி, கடல்சார் உணவு பொருட்கள் ஏற்றுமதி, தங்க நகை ஏற்றுமதி உள்பட அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மற்ற பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் மத்திய அரசாங்கம் நாடுகளை கண்டறிய தொடங்கிவிட்டது. ஆக ஒரு கதவு மூடினால் மற்ற கதவுகளை திறக்க மத்திய அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது. இந்த வரி விதிப்பால் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கி அவர்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மானியங்கள், குறைந்த வட்டியில் கடன், கடன் ரத்து, உள்நாட்டு விற்பனைக்கு சலுகைகள் என்று பல உதவிகளை செய்து மத்திய அரசாங்கம் உதவிக்கரம் நீட்டவேண்டும்.






