ஈரப்பதத்தால் வாடும் விவசாயிகள்

நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்தான் மத்திய அரசாங்கத்தின் உத்தரவுப்படி வாங்கப்படுகிறது.
காவிரி நதியினால் வளம் கொழிக்கும் டெல்டா மாவட்டங்கள்தான் தமிழகத்தின் நெல் களஞ்சியமாக திகழ்கின்றன. அதனால்தான் ‘சோழ நாடு சோறுடைத்து’ என்ற முதுமொழி பண்டைய காலந்தொட்டே சொல்வழக்கில் இருந்துவருகிறது. இங்கு குறுவை, சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடிகள் ஆண்டுதோறும் நடக்கிறது. மேட்டூர் அணையில் நடப்பாண்டு முழுவதும் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு இருந்ததால், காவிரி நீர் கடைமடை வரை பெருக்கெடுத்து ஓடியது. இதுமட்டுமல்லாமல் பருவமழையும் கைகொடுத்தது. இதனால் தண்ணீர் பஞ்சம் கிஞ்சித்துமில்லாமல் விவசாயம் செழித்ததால் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் குறுவை சாகுபடி இருந்தது. கடந்த ஆண்டு குறுவையில் நெல் சாகுபடி 3.80 லட்சம் ஏக்கரில் இருந்த நிலையில், இந்த ஆண்டில் 6.34 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடையும் தொடங்கியிருக்கிறது.
தனியாரைவிட, அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் விலை அதிகம் என்பதால், விவசாயிகள் அனைவரும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கே வண்டிகளிலும், டிராக்டர்களிலும் நெல் உடன் படையெடுத்தனர். மத்திய அரசு சன்னரக நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ 2,389-ம், பொது ரக நெல்லுக்கு ரூ.2,369-ம் குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயித்துள்ளது. இதோடு தமிழக அரசு சன்ன ரக நெல்லுக்கு ரூ.156-ம், பொது ரக நெல்லுக்கு ரூ.132-ம் ஊக்கத்தொகையாக வழங்குகிறது. தமிழக அரசு, டெல்டா மாவட்டங்களில் 1,825 கொள்முதல் நிலையங்களை திறந்து 50 நாட்களில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. கொள்முதல் நிலையங்களின் திறனுக்கும் அதிகமாக விவசாயிகளிடம் நெல் இருக்கிறது. ஏராளமான விவசாயிகள் தங்களிடம் இருக்கும் நெல்லை கொள்முதல் நிலையங்களின் வாசலில் வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் மூட்டைகளெல்லாம் நனைந்து நெல்மணிகள் முளைக்க தொடங்கிவிட்டன. இதற்கும் மேலாக அறுவடை செய்யாத வயல்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கிவிட்டன. அரசுக்கு ஒரு சங்கடம் என்னவென்றால், விவசாயிகளிடம் இருந்து நெல்லை வாங்கி கிடங்குகளுக்கு அனுப்பி அங்கிருந்து அரவை மில்களுக்கு அனுப்பமுடியாத நிலை இருக்கிறது. நெல் அரவை செய்யப்பட்டு அரிசியாக்கிய பிறகு 100 கிலோவுக்கு சத்து மிகுந்த செறிவூட்டப்பட்ட அரிசியை ஒரு கிலோ என்ற விகிதத்தில் சேர்க்கவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவே இதற்கு காரணம். செறிவூட்டப்பட்ட அரிசியை பரிசோதித்து மத்திய அரசாங்க ஆய்வகங்களில் சான்றிதழ் கொடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினாலும், அரவை தொடங்கமுடியாத சூழல் உள்ளது.
மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்தான் மத்திய அரசாங்கத்தின் உத்தரவுப்படி வாங்கப்படுகிறது. இப்போது பெய்யும் மழையினால் விவசாயிகளிடம் உள்ள நெல்லின் ஈரப்பதம் அதைவிட அதிகமாக இருக்கிறதால் அவர்களால் நெல்லை விற்க முடியவில்லை. எனவே ஈரப்பதத்தின் அளவை 22 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று, நிலைமையை நேரில் பார்வையிட 3 குழுக்களை மத்திய அரசாங்கம் நியமித்துள்ளது. அவர்கள் இன்று தங்கள் பணியினை தொடங்குகிறார்கள். இதுதவிர நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகளுக்கும், வயலில் மழையால் மூழ்கிய நெற்பயிர்களுக்கும் உரிய இழப்பீடை அரசோ, காப்பீட்டு நிறுவனங்களோ வழங்கி விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும்.






