மணி அடித்தால் தண்ணீர் குடிக்கலாம்


மணி அடித்தால் தண்ணீர் குடிக்கலாம்
x

அனைத்து பள்ளிக்கூடங்களிலும் “வாட்டர் பெல்’’ என்ற ஒரு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டு, அதுவும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

மாணவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பது என்பது நல்ல ஆரோக்கியத்துக்கு தேவையான ஒன்றாகும். உடலில் நீர்ச்சத்து குறைந்தால் பல சுகாதாரக்கேடுகள் வரும் என்பது டாக்டர்களின் கூற்றாகும். அதனால்தான் தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது டாக்டர்களின் அறிவுரையாகும். அதிலும் குறிப்பாக, வளரும் பருவத்தில் அடிக்கடி தண்ணீர் குடிக்கவேண்டும் என்பதால்தான் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் குடிநீர் வசதி இருக்கவேண்டும் என்பது ஒரு விதியாக இருக்கிறது. "அனைத்து இயற்கைக்கும் தண்ணீர்தான் உந்துசக்தி'' என்று ஓவியரும், விஞ்ஞானியுமான லியோனார்டோ டா வின்சி கூறியிருக்கிறார். இதனால் இப்போது பள்ளிக்கூட கல்வித்துறை அமைச்சர், அனைத்து பள்ளிக்கூடங்களிலும் "வாட்டர் பெல்'' என்ற ஒரு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டு, அதுவும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

இதன்படி அனைத்து மாணவர்களும் வீட்டில் இருந்து வரும்போதே தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டிலையோ அல்லது காலிபாட்டிலையோ கொண்டுவரவேண்டும். காலிபாட்டில் கொண்டுவந்தால், பள்ளிக்கூடங்களில் உள்ள குடிநீர்வசதியை பயன்படுத்தி பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக்கொள்ளலாம். தினமும் பள்ளிகளில் நடக்கும் காலை வணக்கக்கூட்டத்தில் மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை விளக்கிக்கூற வேண்டும். மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக ஒலிக்கப்படும் மணி, வழக்கமாக அந்த பள்ளியில் அடிக்கப்படும் மணி சத்தத்தைவிட சற்று மாறுபட்டதாக இருக்கவேண்டும். மாணவர்களிடம், அந்த மணி சத்ததைக்கேட்டால் உடனடியாக தண்ணீர் பாட்டிலை எடுத்து தங்கள் தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்க அறிவுறுத்தவேண்டும். அதாவது, மணி அடித்தால் அது தண்ணீர் வேளை, அது வாட்டர் பெல் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். தினமும் காலை 11 மணி இடைவேளையின்போதும், பகல் ஒரு மணிக்கு மதிய உணவுவேளையின்போதும், பிற்பகலில் 3 மணி இடைவேளையின்போதும் இந்த மணி ஒலிக்கப்பட வேண்டும்.

தண்ணீர் குடிப்பதற்காக எந்த மாணவரும் வகுப்பு அறையை விட்டு வெளியே செல்ல ஆசிரியர்கள் அனுமதிக்கக்கூடாது. வகுப்பு சூழ்நிலையை பாதிக்காமல் வகுப்பறையில் இருந்தே குடிநீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்க 2 அல்லது 3 நிமிடங்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஒதுக்கலாம். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன், அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மூலமாக ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும், பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் கொண்டுவரும் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக்கொள்ள சுத்தமான தண்ணீரை வைத்து முறையாக பராமரிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கூடங்களில் இவ்வாறு வகுப்புகள் நடக்கும்போதே தண்ணீர் குடிக்க அனுமதிப்பது, அவர்களுக்கு பாடத்தின் மீது உள்ள கவனத்தை அதிகரிக்க செய்யும். அவர்களுடைய நினைவாற்றலையும் அதிகரிக்கும். மனித மூளை 75 சதவீதம் நீராலானது. எனவே போதுமான அளவு தண்ணீர் குடித்தால் அதன் செயல்பாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், தலைவலி மற்றும் சோர்வை தடுக்கும். மனநிலை மற்றும் நம் ஒவ்வொருவரின் நடத்தையை நீர்ச்சத்து குறைபாடு பாதிக்கும். பல ஆரோக்கியமான பழக்கங்களை ஊக்குவிக்கும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நல்ல முடிவை பள்ளிக்கல்வித்துறை எடுத்தது மிகவும் பாராட்டுக்குரியது. சுலோவேகியா நாட்டில் சுத்தமான தண்ணீர்தான் உலகிலேயே முதலாவது மற்றும் முதன்மையான மருத்துவமாகும் என்ற முதுமொழி, தமிழ்நாட்டில் இந்த வாட்டர் பெல் திட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களில் வழங்குவதும், கல்வித் துறையின் நடவடிக்கையில் அவசியமான ஒன்று.

1 More update

Next Story