செமிகண்டக்டர் உற்பத்தியில் காலெடுத்து வைத்த இந்தியா


செமிகண்டக்டர் உற்பத்தியில் காலெடுத்து வைத்த இந்தியா
x

மிக விரைவில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் செமிகண்டக்டர் உற்பத்தியில் பெரிய புரட்சி நடக்கப்போகிறது.

தினத்தந்தி குழுமத்தின் ஒரு அங்கமான தந்தி டிவியின், பாட்காஸ்ட் நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. அதில் சமீபத்தில் வெளியான நிகழ்ச்சியில் செமிகண்டக்டர் பற்றி சாமானிய மனிதனும் புரிந்து கொள்ளும் வகையில் மிக தெள்ளத் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. செமிகண்டக்டர் என்றால் என்ன? அதன் பயன்பாடு என்ன? எதிர்காலத்தில் அது வழங்கப்போகும் வேலை வாய்ப்புகள் என்ன? என்பது குறித்து ஒரு பாடமே நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு, செமிகண்டக்டர் பற்றி ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டு விட்டது. இந்த உலகமே சிப் என்ற ஒரு சிறிய விஷயத்தில்தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. செல்போன், லேப்-டாப், வாஷிங் மெஷின், கார், விமானம், ஏன் ரோபோ முதற்கொண்டு அனைத்து தகவல் தொழில் நுட்ப மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் இந்த சின்னஞ்சிறிய அளவிலான சிப் மூலம் தான் இயங்குகிறது.

இந்த சிப் தயாரிக்க வேண்டுமென்றால் அதற்கு செமிகண்டக்டர் தான் தேவை. அதாவது செமி கண்டக்டர் என்பது அரிசி மாதிரி, சிப் என்பது சோறு போன்றது. சோறு சமைக்க அரிசி எப்படி தேவையோ? அதுபோல சிப் தயாரிக்க செமி கண்டக்டர் அத்தியாவசியமாகும். இந்த வகையில் எளிய விளக்கம் தந்தி டிவியில் ஒளிபரப்பப்பட்ட பாட்காஸ்டில் கூறப்பட்டது. இந்த சிப்-களைப் பொறுத்த மட்டில் இப்போதும் இந்தியா வெளிநாடுகளின் இறக்குமதியை நம்பித்தான் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி சுயசார்பு என்ற தாரக மந்திரத்தின் கீழ் “இந்தியாவில் தயாரிப்போம், உலகுக்காக வழங்குவோம்’’ என்ற முழக்கத்துடன் வெளிநாடுகளை எதற்கும் சார்ந்து இல்லாமல் அனைத்து பொருட்களையும் இந்தியாவிலேயே தயாரிக்கவேண்டும் என்ற முனைப்பில் செயல்படும் நடவடிக்கையில் இப்போது செமிகண்டக்டர் ஒரு முக்கிய பங்கு வகிக்கப்போகிறது.

இந்த நிலையில் டெல்லியில் “செமிகான் இந்தியா -2025” என்ற சர்வதேச 3 நாட்கள் கருத்தரங்கு நடந்தது. இதனை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடியிடம், இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் செமி கண்டக்டர் ஆய்வகம் ஆகியவை இணைந்து உருவாக்கிய செமிகண்டக்டர் சிப் ஆன விக்ரம்-32 வழங்கப்பட்டது. இந்தியாவில் கொடி கட்டிப்பறக்க போகும் சிப் உற்பத்திக்கு இது ஒரு தொடக்கமாகும். இனி இந்தியா விண்ணில் செலுத்தப்போகும் செயற்கைகோள்களில் எல்லாம் இந்த விக்ரம்-32 சிப் பெரும் பணியாற்றும். அதேபோல், இந்தியாவில் சிப் தயாரிக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட கெய்ன்ஸ் செமிகான் நிறுவனம் தனது சிப்-ஐ அடுத்த மாதம் வெளியிடுகிறது. ஆக அடுத்தடுத்து பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை பெருக்கி, சிப்-களை வெள்ளம் போல மார்க்கெட்டுக்கு கொண்டு வர வேகம் எடுத்துவிட்டன.

செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசாங்கம் ரூ.76 ஆயிரம் கோடி ஊக்குவிப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த செமிகண்டக்டர் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருளான சிலிக்கான் மற்றும் குவார்ட்ஸ் மணல் தமிழ்நாட்டிலும் கிடைக்கிறது. இதை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் செமிகண்டக்டர் தயாரிப்பதற்காக தமிழக அரசு சென்னை மற்றும் கோவையில் உற்பத்தி பூங்காக்களை தொடங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆக மிக விரைவில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் செமிகண்டக்டர் உற்பத்தியில் பெரிய புரட்சி நடக்கப்போகிறது. இதன்மூலம் தயாரிக்கப்படும் சிப்-கள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

1 More update

Next Story