வலுவிழக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு


வலுவிழக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு
x

டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு ரூ.87.48 ஆக இருக்கிறது.

ஒவ்வொரு நாட்டின் பரிமாற்றத்திற்கும் அந்த நாட்டில் ஒரு கரன்சி இருக்கிறது. இந்தியாவின் கரன்சி என்றால் அது ரூபாய்தான். பெரும்பாலான நாடுகளின் கரன்சியின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு இணையாக, அதற்கு இருக்கும் மதிப்பை வைத்துதான் மதிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு அமெரிக்க டாலரை எவ்வளவு ரூபாயை வைத்து வாங்க முடிகிறதோ அதுதான் ரூபாயின் மதிப்பை மதிப்பிடும் அளவுகோலாக இருக்கிறது. உலகம் முழுவதுக்குமான பொது நாணயமாக டாலர்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் டாலரை வைத்துதான் மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில், இந்திய ரூபாயின் மதிப்பு நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சர்வதேச நிலவரங்களை பொறுத்து ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது.

டாலருக்கு இணையான ரூபாயின் விலை குறைவாக இருந்தால் ரூபாயின் மதிப்பு வலுவாக இருப்பதாகவும், அதிகமாக இருந்தால் ரூபாயின் மதிப்பு வலுவிழந்து இருப்பதாகவும் கருதப்படுகிறது. தற்போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதலில் 25 சதவீதமும், இப்போது 50 சதவீதமும் வரி விதித்ததை தொடர்ந்தும், ரஷியா-உக்ரைன் போர், இஸ்ரேல்-காசா போர் போன்ற பல சர்வதேச காரணங்களாலும் ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இப்போது டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு ரூ.87.48 ஆக இருக்கிறது. இந்த சரிவு இதோடு நின்றுவிடாது இன்னும் அதிகமாக சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் பங்கு சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன பங்குகள், வங்கி பங்குகள்தான் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்றுவருகிறார்கள். வலுவிழந்து இருக்கும் ரூபாயால் லாபமும் இருக்கிறது. இந்தியாவில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் டாலர் மதிப்பில்தான் தங்கள் ஏற்றுமதி பொருட்களை விற்கிறார்கள். அந்தவகையில், டாலரில் விற்கும்போது அதற்கு இணையான ரூபாய் அதிகமாக இருக்கிறது. ஆக ரூபாயில் அதிக தொகையை பெறமுடியும். அதுபோல வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் அங்கு இருந்து இந்தியாவுக்கு டாலரில் பணம் அனுப்பும்போது இந்திய ரூபாயில் அதிக பணம் கிடைக்கும். ஆனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்போது டாலர் மதிப்பில்தான் மேற்கொள்ளப்படுவதால் அதற்கு இணையாக அதிக ரூபாய் கொடுக்கவேண்டியது இருக்கும். குறிப்பாக கச்சா எண்ணெய், மின்னணு பொருட்கள் போன்ற பல இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக செலவழிக்கவேண்டியது இருக்கும்.

இதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் படிப்பவர்களுக்கு வழக்கமாக ஆகும் செலவைவிட இப்போது அதிகமாக செலவாகும். மேலும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்பவர்களுக்கும் அதிகமாக செலவாகும். மற்ற ஆசிய நாடுகளை விட ரூபாய்தான் மிகவும் அதிகமாக வலுவிழந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பிழப்பு டாலரோடு முடிந்துவிடவில்லை. பல நாட்டு கரன்சிகளுக்கு இணையான மதிப்பும் வீழ்ந்துள்ளது. அமீரகத்தில் உள்ள கரன்சியான திர்ஹாமுக்கு எதிரான ரூபாய் மதிப்பு இப்போது ரூ.23.81 ஆக சரிந்துள்ளது. இதனால் அமீரகத்துக்கு சுற்றுலா செல்பவர்களும், அங்கிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கும் அதிகமாக கொடுக்கவேண்டியது இருந்தாலும் அங்கு பணியாற்றும் இந்தியர்கள் சொந்த ஊருக்கு பணம் அணுப்பும்போது வழக்கமான பணத்தைவிட கூடுதலாக அனுப்பமுடிகிறது. ஆக ரூபாய் மதிப்பிழப்பால் லாபமும் இருக்கிறது, நஷ்டமும் இருக்கிறது. ஆனால் பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டியது இருக்கிறது.

1 More update

Next Story