தேர்வுக்கு மேல் தேர்வா? போதுமடா சாமி

சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வை 4.24 லட்சம் பேர் எழுதியிருக்கிறார்கள்.
சென்னை,
“ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி’’ என்று ஆன்றோர் சொன்ன புனிதப்பணியான ஆசிரியர் பணியில் சேருவதற்கு தேர்வுக்குமேல் தேர்வு என்ற நிலை இருக்கிறதே என்று ஆசிரியர் சமுதாயம் கவலைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் வேலைக்கு என தனிப்படிப்பு அனைத்து மட்டங்களிலும் இருக்கிறது. பிளஸ்-2 முடித்தவர்கள், ஆசிரியர் படிப்புக்கான 2 ஆண்டு டிப்ளமோ படிப்பை ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் படித்து அதற்கான தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு தேர்ச்சிபெற்றவர்கள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். இதேபோல் பட்டப்படிப்பை முடித்தவர்கள், ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட். பட்டப்படிப்பை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் 2 ஆண்டுகள் படித்து தேர்ச்சிபெற்றால் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்படமுடியும்.
இந்த எளிதானநிலை 2012-ம் ஆண்டுக்கு முன்பு வரைதான் இருந்தது. 2012-ம் ஆண்டிலிருந்து இடைநிலை ஆசிரியர்கள் அவர்களுக்கான டிப்ளமோ படிப்பை முடித்திருந்தாலும், ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 என்ற தேர்விலும், பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 என்ற தேர்விலும் கண்டிப்பாக தேர்ச்சிபெற்றிருந்தால்தான் ஆசிரியருக்கான தகுதியை பெறுவார்கள் என்ற நடைமுறை வந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் தகுதித்தேர்வை ஆசிரியர்கள் எழுதத்தான் செய்கிறார்கள். அந்தவகையில், சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வை 4.24 லட்சம் பேர் எழுதியிருக்கிறார்கள்.
ஏற்கனவே பிளஸ்-2, ஆசிரியர் பயிற்சிக்கான டிப்ளமோ படிப்பு என்று ஒரு பக்கம், மற்றொரு பக்கம் பட்டப்படிப்பு தொடர்ந்து ஆசிரியர் பயிற்சிக்கான பட்டப்படிப்பு, அதன்பின் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வு என்று பல தேர்வுகளில் வெற்றிபெற்றபிறகும், மீண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வா?, ‘தேர்வுக்குமேல் தேர்வா போதுமடா சாமி’ என்று ஆசிரியர்கள் அலறுகிறார்கள். சரி இருக்கட்டும், புதிதாக பணியில் சேருபவர்களுக்கு மட்டும் இந்த தேர்வு என்றால் பரவாயில்லை. பணியில் இருந்து ஓய்வுபெறுவதற்கு 5 ஆண்டுகள் வரை இருக்கும் ஆசிரியர்களைத்தவிர, மற்ற ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றால்தான் பணியில் தொடரமுடியும் என்ற சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பலரை வீட்டுக்கு அனுப்ப வாசலை திறந்துவிட்டது. இப்போது இதுபோல பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக சிறப்பு தகுதித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களைத்தாண்டி முதுகலை பட்டப்படிப்பு படித்து ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 9 முதல் பிளஸ்-2 வரையிலான மேல்நிலைவகுப்புகளில் பாடம் நடத்த ஆசிரியர் தகுதித்தேர்வு அவசியம் இல்லையென்றாலும், அவர்கள் ஆசிரியர் தேர்வுவாரியம் நடத்தும் அவரவர் பாடங்களுக்கான தேர்வில் வெற்றிபெற்றிருந்தால்தான் பணியில் சேரமுடியும். அதன்படி, இந்த ஆண்டு 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்காக தேர்வு அக்டோபர் 12-ந்தேதி நடந்தது. இந்த தேர்வை 2,20,412 பேர் எழுதினார்கள். அதாவது, ஒரு ஆசிரியர் பணியிடத்துக்கு 110 பேர் போட்டியிட்டனர். தேர்வுமையத்துக்குள் ஆசிரியர் கனவுடன் தேர்வுஎழுத சென்றவர்களில் பெரும்பாலானோர், தேர்வு எழுதிவிட்டு வெளியேவந்தபோது சோகத்தின் உச்சியில் இருந்தனர்.
வேதியியல் முதுகலை பெண் பட்டதாரி, வினாத்தாளை திருப்பிய பக்கமெல்லாம் கண்ணிவெடியாகத்தான் இருந்தது என்றார். மற்றொருவர் ‘குளத்தில் வினாக்களை போட்டிருந்தால் தேடிகண்டுபிடித்துவிட முடியும். இங்கு கடலில் அல்லவா போட்டிருக்கிறார்கள். எப்படி தேடுவது? என்று கடினமாக கேட்கப்பட்டிருந்த வினாக்கள் பற்றி குறைபட்டுக்கொண்டார். புதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் என்பதால், அதுவும் கடினமாக இருந்தது என்றார்கள். பெரும்பாலானோருக்கு தேர்வு கடினம் என்றாலும், இந்த கடின வினாத்தாளை எழுதி தேர்வு பெற்றவர்களுக்கு ஆசிரியர் வேலை நிச்சயம். அந்தவகையில் இந்த முறை தேர்ச்சி பெறுபவர்கள் சிறந்த அறிவாற்றல் பெற்றவர்கள் என்பதால் ஆசிரியர்களின் தரமும் உயர்வாக இருக்கும்.






