வலிக்கவில்லை ; ஆனால் வசதிகள் வேண்டும் !


It doesnt hurt; but I need facilities!
x

தொலைதூரம் போகும் பயணிகள் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர்.

சென்னை,

வசதியான பயணம் என்றால் அது ரெயில் பயணம்தான். தொலைதூரம் போகும் பயணிகள் தூங்கிக்கொண்டு செல்லவும், கழிப்பறைகளை பயன்படுத்தவும் முடியும் என்பதால் ரெயில் பயணத்தையே பெரும்பாலானோர் தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் தினமும் 2.5 கோடி பயணிகள் 13 ஆயிரம் ரெயில்களில் 69 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணம் செய்கிறார்கள். இதில் 4,111 ரெயில்கள் எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரெயில்களாகும். நாட்டில் தெற்கு ரெயில்வே உள்பட 17 பிராந்தியங்களும், 69 கோட்டங்களும் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 6 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமான ரெயில் பாதை இருக்கிறது. அதில், 500-க்கும் அதிகமான ரெயில் நிலையங்கள் உள்ளன. இன்னும் ரெயில்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் தமிழ்நாட்டுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. சென்னையில் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் சேவைகள் மக்களின் அன்றாட போக்குவரத்து தேவையை கணிசமாக பூர்த்தி செய்கின்றன. ரெயில்வேயின் வருவாயை இந்த நிதி ஆண்டுக்கு கணக்கிடும்போது ஒரு ரூபாய் வருவாய் ஈட்டினால் 98.43 காசு செலவுக்கு போய்விடுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மீதம் உள்ள 1.57 சதவீத தொகையை வைத்துதான் புதிய ரெயில்கள் விடுவதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும், பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதற்கும் செலவழிக்கவேண்டியது இருக்கிறது.

பயணிகள் டிக்கெட் வருவாய் பற்றாக்குறையை சரிக்கட்ட சரக்கு ரெயில் கட்டணம் கைகொடுக்கிறது. இந்தநிலையில் கடந்த 2013, 2014, 2020-க்கு பிறகு இப்போது 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரெயில் கட்டணம் மிக குறைந்த அளவில் கூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வசூலிக்கப்பட உள்ள இந்த கூடுதல் கட்டணம் நிச்சயமாக மக்களுக்கு வலிக்காது. அனைத்து ரெயில்களிலும் உள்ள குளிர்சாதன வசதியுடைய ரெயில் பெட்டிகளில் பயணம் செய்வதற்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 காசுகளும், குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு கிலோ மீட்டருக்கு 1 காசும் உயர்த்தப்படுகிறது. அப்படி பார்த்தால் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெட்டிகளில் எழும்பூரில் இருந்து நெல்லைக்கு (650 கிலோ மீட்டர்) பயணம் செய்தால் ரூ.13-ம், சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு (495 கிலோ மீட்டர்) ரூ.9.90-ம் கூடுதலாக செலுத்தவேண்டியது இருக்கும். அதுபோல குளிர்சாதன வசதி இல்லாத முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்யும்போது நெல்லைக்கு ரூ.6.50-ம், கோவைக்கு ரூ.4.95-ம் மட்டுமே கூடுதலாக கொடுக்கவேண்டியது இருக்கும்.

முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணம் செய்தால் முதல் 500 கிலோ மீட்டருக்கு கட்டண உயர்வு இல்லை. அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ½ பைசா மட்டுமே உயர்த்தப்படும். அப்படி பார்த்தால் நெல்லைக்கு 60 காசுகள் மட்டுமே உயர்த்தப்படும். மின்சார ரெயில்களுக்கும், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கும் கட்டணம் உயர்த்த திட்டம் இல்லை. கடந்த 2020-ம் ஆண்டில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 காசுகளும், குளிர்சாதன வசதியில்லாத பெட்டிகளுக்கு 2 காசுகளும் உயர்த்தப்பட்டது. அதோடு ஒப்பிடும்போது இப்போது பாதி அளவு மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் கழித்து உயர்த்தப்பட உள்ள இந்த உயர்வு பெரிதும் பாதிக்காது என்றாலும் ரெயில் பயணிகளுக்கு இன்னும் செய்யவேண்டிய வசதிகள் நிறைய இருக்கிறது. பொதுமக்களின் தேவைக்கு ஏற்றவகையில் ரெயில்களின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும். ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கவேண்டும், ரெயில் நிலையங்களிலும், ரெயில் பெட்டிகளிலும் இன்னும் பராமரிப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும்.

1 More update

Next Story