கலை பட்டதாரிகளுக்கு தேடி வரும் வேலைவாய்ப்புகள்

உயர் படிப்புகளில் சேரும் மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.
பிளஸ்-2 முடித்தவுடன் கண்டிப்பாக உயர்கல்விக்கு செல்லவேண்டும் என்ற உணர்வு மாணவர்களிடம் இப்போது மேலோங்கி இருக்கிறது. அரசு பள்ளிகளில் படித்துவிட்டு உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டம் மூலமும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வந்த பிறகு உயர் படிப்புகளில் சேருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. இந்தியாவிலேயே பிளஸ்-2 படித்தவுடன்
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை என்ஜினீயரிங், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளே மாணவர்களின் முதல் தேர்வாக இருந்தது. இதற்கு காரணம் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கைதான். ஆனால் இந்த ஆண்டு இந்த நிலை மாறிவிட்டது. தொழிற்படிப்புகளில் சேருவதற்கான ஆர்வத்துக்கு இணையாக, கலை கல்லூரிகளில் சேருவதற்கும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை கல்லூரிகளில் மட்டும் ஒரு லட்சத்து 26 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. இதுபோல 140-க்கும் அதிகமான அரசு உதவிபெறும் கல்லூரிகள், 650-க்கும் மேற்பட்ட சுயநிதி கலை கல்லூரிகள் இருக்கின்றன. மாணவர் சேர்க்கை முடிந்தபிறகும் இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் படிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க ஆணை பிறப்பித்ததைத்தொடர்ந்து அந்த கல்லூரிகளும் தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது.
எனினும் இன்னும் அதிகமான மாணவர்கள் சேர கல்லூரிகளில் இடம் இல்லை என்பதை உயர் கல்வித்துறை செயலாளர் பி.சங்கர், முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றதைத்தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீதம், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் மற்றும் தனியார் கல்லூரிகளில் 10 சதவீத இடங்களை உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் கல்லூரிகளில் சேர்ந்து பட்டப்படிப்பு படிக்கவேண்டும் என்ற அனைத்து மாணவர்களின் கனவும் நனவாகப்போகிறது. இந்த அளவுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் படையெடுப்பதற்கு பல்கலைக்கழக தேர்வில் சிறந்து விளங்கி அதிக மதிப்பெண்கள் பெறும் கலை பட்டதாரிகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைப்பதுதான் காரணம்.
ஆங்கில புலமை இருக்கும் மாணவர்களுக்கு ஐ.டி. கம்பெனிகளில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதுபோல பல தனியார் நிறுவனங்கள் நல்ல அறிவாற்றல் மிகுந்த மாணவர்களை ‘கேம்பஸ் இண்டர்வியூ’ மூலம் தேர்ந்தெடுத்து வேலையில் அமர்த்திவிடுகிறார்கள். வேதியியல் மற்றும் இயற்பியல் படித்து சிறப்பாக தேர்ச்சி பெறும் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு மருந்து கம்பெனிகளிலும், விண்வெளி ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களிலும், கணிதம் படிக்கும் மாணவர்களுக்கு பல நிறுவனங்களிலும், வணிகவியல் படித்த மாணவர்களுக்கு அதுதொடர்பான நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதுதவிர இப்போது மத்திய, மாநில அரசுகளிலும் நிறைய வேலைகளுக்கு தேர்வு நடக்கிறது. மொத்தத்தில் கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் வேலைவாய்ப்புகள் அவர்களுக்காக காத்து இருக்கும்.






