பள்ளிக்கூடங்களில் எண்ணெய், சர்க்கரை போர்டுகள்


பள்ளிக்கூடங்களில் எண்ணெய், சர்க்கரை போர்டுகள்
x
தினத்தந்தி 6 Aug 2025 5:45 AM IST (Updated: 6 Aug 2025 5:45 AM IST)
t-max-icont-min-icon

போர்டுகள் எந்த வடிவமைப்பில் இருக்க வேண்டும்? என்று உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் நிர்ணயித்து கொடுத்துள்ளது.

உடல் ஆரோக்கியம்தான் அனைவருக்கும் மிகவும் முக்கியமானதாகும். தற்போதைய காலக்கட்டத்தில் உணவு பழக்கவழக்கங்களினாலும், உடற்பயிற்சி இல்லாததாலும் சிறுவயதிலேயே குறிப்பாக மாணவ பருவத்திலேயே உடல்பருமன் மட்டுமல்லாமல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் வந்துவிடுகின்றன. முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும் இந்த நோய்கள் இப்போது இளம் வயதிலேயே வந்து ஒட்டிக்கொள்கின்றன.

சிறு வயதிலேயே இந்த நோய்கள் வந்துவிட்டால் அவர்கள் பெரியவர்களாகும்போது நோய்கள் மிகவும் தீவிரமடைவது மட்டுமல்லாமல், அதன் விளைவாக மேலும் பல நோய்களும் தொற்றிக்கொள்ளும் நிலை இருக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய் நீண்ட காலமாக இருந்தால் அதனால் இதய நோய், சிறுநீரக கோளாறு, கண் பார்வை பாதிப்பு என்று பல நோய்களுக்கு அதுவே மூல காரணமாக அமைந்துவிடும்.

இதுபோல ரத்த அழுத்தம் வந்துவிட்டாலும் அதுவே மேலும் பல நோய்களின் உற்பத்தி தளமாக மாறிவிடுகிறது. அதிகளவில் சர்க்கரை சத்துள்ள உணவு பண்டங்களையும், எண்ணெய் பலகாரங்களையும் சாப்பிடுவதே இந்த நோய்களுக்கெல்லாம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது போல ஆகிவிடுகிறது. குழந்தைகளுக்கு உடல்பருமன் அதிகமாவதும், சர்க்கரை நோய் போல பல நோய்கள் பிஞ்சு வயதிலேயே வருவதற்கும் இதுவே அடிப்படையாக இருக்கிறது.

எனவே மத்திய கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களிலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே வளர்ப்பதற்காக பொது இடங்களில் 'ஆயில் போர்டு' என்ற எண்ணெய் பண்ட அறிவிப்பு போர்டு மற்றும் 'சுகர் போர்டு' என்ற சர்க்கரை உணவு தொடர்பான அறிவிப்பு போர்டு வைக்க மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்த போர்டுகள் எந்த வடிவமைப்பில் இருக்க வேண்டும்? என்று உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் நிர்ணயித்து கொடுத்துள்ளது. இதில் மாணவர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் சமோசா, வட பாவ் மற்றும் பீட்சா போன்ற உணவு வகைகளில் எவ்வளவு கொழுப்பு சத்து இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஒருவர் ஒரு நாளைக்கு 27 கிராம் முதல் 30 கிராம் வரைதான் கொழுப்பு உட்கொள்ளலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

இதுபோல அந்த பள்ளிக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள சர்க்கரை போர்டில் மாணவர்கள் சாப்பிடும் சாக்லேட்டுகள் மற்றும் குளிர்பானங்களில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது? என்று குறிப்பிட்டிருக்கவேண்டும். சமீபத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள போர்டு விவரங்களை மாணவர்களின் கண்களில் படும் வகையில் முக்கிய இடத்தில் வைப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான உணவு வகைகள் எவை? எவை?, உடற்பயிற்சியின் அவசியம் போன்றவற்றையும் விளக்கவேண்டும் என்று கூறியுள்ளது.

மாணவர்களுக்கு இளம் வயதிலேயே எந்தெந்த உணவு வகைகளில் என்னென்ன சத்துகள் இருக்கிறது? எண்ணெய் எவ்வளவு இருக்கிறது? சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது? என்னென்ன உணவு வகைகளை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது? என்று மனதில் ஆழமாக பதியும் வகையில் இவ்வாறு தெரிவிப்பது மிகவும் நல்லது.

ஆரோக்கியமாக வாழ நாம் சாப்பிடும் உணவு வகைகளில் அளவுக்கு அதிகமான எண்ணெய், சர்க்கரை இருப்பதை தெரிவிக்கவேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துவது பலனளிப்பதாகும். இந்த நடைமுறையின் நல்ல விளைவுகளைப்பார்த்து தமிழக கல்வி திட்டத்தை பின்பற்றும் பள்ளிக்கூடங்களிலும் செயல்படுத்தினால் வரவேற்புக்குரியதாக இருக்கும்.

1 More update

Next Story