பென்சன் தொகையை உயர்த்த வேண்டும்


பென்சன் தொகையை உயர்த்த வேண்டும்
x

‘அடல் பென்சன் யோஜனா’ என்ற திட்டத்தை மக்கள் 60 வயதுக்கு மேல் மாதாந்திர பென்சன் பெறுவதற்காக பிரதமர் மோடி கொண்டு வந்தார்.

மத்திய அரசாங்கத்தில் பணியில் இருப்பவர்களைவிட ஓய்வுபெற்று பென்சன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதேபோல தமிழக அரசிலும் பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏறக்குறைய இணையான எண்ணிக்கையில் பென்சன் வாங்குபவர்கள் இருக்கிறார்கள். பென்சன் பெறுபவர்களுக்கு மாதாமாதம் குறிப்பிட்ட தொகை வந்துவிடுவதால், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. இந்த பென்சன் தொகையும் குறிப்பிட்ட தொகை அல்ல. விலைவாசி உயர்வுக்கு ஏற்றபடி அகவிலைப்படியும் அவ்வப்போது உயரும். இதுபோல தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் குறைந்த தொகை என்றாலும் ‘பிராவிடண்ட் பண்ட் பென்சன்’ கிடைக்கும்.

இதுதவிர பணியில் இருந்து ஓய்வுபெறும்போது ‘கிராஜூவிட்டி’ என்று கூறப்படும் பணிக்கொடையாகவும் நல்ல தொகை கிடைக்கும். ஆனால் அன்றாட ஊதியத்துக்காக பணி செய்யும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பென்சனும் கிடையாது, பணிக்கொடையும் கிடையாது. ஓய்வுகாலத்தில் பிழைப்புக்கு யாரையாவது நம்பியிருக்கவேண்டும் அல்லது வாழ்வுகாலத்தின் இறுதிவரை முடிகிறதோ? முடியவில்லையோ? சாப்பாட்டுக்காக உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற நிலை இருந்துவருகிறது. இந்த நிலையை போக்க பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற, அடுத்த ஆண்டில் அதாவது 2015-ம் ஆண்டு மே மாதம் 9-ந்தேதி ‘அடல் பென்சன் யோஜனா’ என்ற திட்டத்தை இதுபோன்ற மக்கள் 60 வயதுக்கு மேல் மாதாந்திர பென்சன் பெறுவதற்காக கொண்டு வந்தார்.

இந்த திட்டத்தில் சேருபவர்களின் மாதாந்திர பங்களிப்பின் அடிப்படையில் 60 வயதுக்கு மேல் மாதம் ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000, ரூ.5,000 என்று பென்சன் பெறமுடியும். இந்த திட்டத்தில் 40 வயதுக்குள் சேரவேண்டும். மாதா மாதம் ரூ.42 முதல் அதிகபட்சமாக ரூ.1,318 வரை அவரவர் வயதுக்கேற்றவகையில் மாதந்தோறும் செலுத்தவேண்டும். இதில் சேருபவர்களுக்கு 60 வயது முதல் அவர்கள் வாழ்நாள் வரை பென்சன் கிடைக்கும். மறைந்த பிறகு அவர்களின் வாழ்க்கை துணைக்கு மாதம் அந்த பென்சன் தொகையில் பாதி கிடைக்கும். இந்த திட்டத்தின் பெரிய சிறப்பம்சம் என்னவென்றால் இருவருமே மறைந்துவிட்டால், வாரிசுகளுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ.8.50 லட்சம் வரை கிடைக்கும்.

ஆரம்பத்தில் இந்த திட்டத்தில் அதிகம் பேர் சேரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்ட வேகம் காரணமாக 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1.54 கோடி பேர் மட்டும் இந்த திட்டத்தில் சேர்ந்திருந்த நிலையில் இப்போது கடந்த ஜூலை மாத கணக்குப்படி 8 கோடிக்கும் அதிகமானோர் சேர்ந்திருக்கிறார்கள். இதில், இந்த நிதி ஆண்டில் மட்டும் அதாவது கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் முடிய 38 லட்சம் பேர் சேர்ந்திருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பான கணக்குப்படி தேசிய அளவில் தமிழ்நாடு 5-வது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில் 1 கோடியே 16 லட்சம் பேரும், 2-வது இடத்தில் உள்ள பீகாரில் 69 லட்சத்து 60 ஆயிரம் பேரும் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 48.60 லட்சம் பேர்தான் சேர்ந்துள்ளனர். தேசிய அளவில் பெண்கள் பங்களிப்பு 47 சதவீதமாக இருக்கிறது. இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை இன்னும் அதிகமாக ஏற்படுத்தவேண்டும்.

பொதுவாக மிகவும் வரவேற்கத்தகுந்த இந்த திட்டத்தில் குறைந்தபட்ச பென்சன் தொகை ரூ.1,000, அதிகபட்ச தொகை ரூ.5 ஆயிரம் என்பது 10 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள விலைவாசியை வைத்து நிர்ணயிக்கப்பட்டது. இப்போதுள்ள விலைவாசிப்படி இந்த தொகையை மேலும் உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கை பலமாக இருக்கிறது. தனியார் நிறுவனங்களும் தங்களிடம் வேலைக்கு சேருபவர்களை இந்த திட்டத்தில் சேர ஊக்குவிக்க வேண்டும்.

1 More update

Next Story