சிறையில் சம்பாதிக்கும் கைதிகள்


சிறையில் சம்பாதிக்கும் கைதிகள்
x

கைதிகள் செய்த பொருட்களை விற்பனை செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருக்கிறது.

சென்னை

தமிழ்நாட்டில் 9 மத்திய சிறைகள், பெண் கைதிகளுக்காக 5 தனி சிறைகள், 14 மாவட்ட சிறைகள் மற்றும் மாவட்டங்களில் கிளை சிறைகள் என்று மொத்தம் 141 சிறைகள் இருக்கின்றன. இவற்றில் விசாரணை கைதிகள் மற்றும் நீதிமன்றங்களால் தண்டனை பெறும் கைதிகள் அடைக்கப்படுகின்றனர். சிறைகள் வெறும் தண்டனை வழங்கும் இடம் மட்டுமல்ல. அது கைதிகளை நல்வழிப்படுத்தி சீர்திருத்தும் பணியை செய்யும் உன்னத பள்ளியாகும். இதனால்தான் பாவங்களை வெறுங்கள், பாவிகளை வெறுக்காதீர்கள் என்று தேசப்பிதா காந்தியடிகள் அடிக்கடி கூறுவார். சிறையில் இருந்து வெளியே வருபவர்கள் குற்ற செயல்கள் செய்வதில் இருந்து திருந்தி, வேலை செய்து பொருள் ஈட்டுவதற்கான முயற்சிகள் இப்போது மேற்கொள்ளப்படுகின்றன. சிறையில் கல்வியறிவு இல்லாத சிறைவாசிகளுக்கு அடிப்படை கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர கைதிகள் ஆரம்பக்கல்வி, தொடக்கக்கல்வி, உயர்நிலை மற்றும் மேல் நிலைக்கல்வி, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள், திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலமாக இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் படிக்கவும் முடியும். ஏராளமான கைதிகள் சிறையில் இருந்து விடுதலையாகும்போது பட்டதாரிகளாகவோ, முதுநிலை பட்டதாரிகளாகவோ வெளியே வருகின்றனர். கைதிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இத்தகைய பயிற்சிகளை பெற்ற கைதிகள் சிறையில் இருக்கும்போதே அந்த திறன் அறிவை பயன்படுத்தி பல பொருட்களை தயாரிக்கிறார்கள். அவர்கள் செய்யும் வேலைக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது. அவர்களில் செயல்திறன் பெற்றவர்களுக்கு தினமும் ரூ.300-ம், பகுதி செயல்திறன் பெற்றவர்களுக்கு ரூ.270-ம், செயல்திறன் பெறாதவர்களுக்கு ரூ.240-ம் ஊதியமாக வழங்கப்படுகிறது.

கைதிகள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள் மற்றும் சில கிளைச் சிறைகளில் சிறைச்சந்தைகள் அதாவது ‘பிரிசன் பஜார்’கள் நிறுவப்பட்டுள்ளன. கைதிகளால் தயாரிக்கப்படும் கேக், பிஸ்கட் போன்ற பேக்கரி பொருட்கள், தோல் காலணிகள், பணப்பைகள், பர்சுகள், தோட்டக்கலை தயாரிப்புகள், சலவை சோப்புகள், மெழுகுவர்த்திகள், கொசுவலைகள், ரெயின் கோட்டுகள், ஷூ பாலிஷ்கள், ரெடிமேடு ஆடைகள், அச்சு வேலைப்பாடுகளுடன் கூடிய சேலைகள், போர்வைகள், துண்டுகள், மசாலா பொருட்கள், கைவினை பொருட்கள், காகித உறைகள், நோட்டு புத்தகங்கள், இயற்கை உரமிட்ட காய்கறிகள், செக்கு எண்ணெய், மண்புழு உரம், கரிம பூச்சி கொல்லிகள், ஓவியங்கள் போன்ற பல்வேறு பொருட்கள் பிரீடம் என்ற குறியீட்டு பெயரில் அதாவது டிரேடு மார்க்கில் விற்கப்படுகின்றன. சிறை சந்தைகளில் உணவகம், அழகு நிலையங்கள், இஸ்திரி போடும் நிலையங்களும் செயல்படுகின்றன.

சில சிறை வளாகங்களில் பெட்ரோல் பங்குகளும் அமைக்கப்பட்டு ஆண், பெண் கைதிகளால் இயக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறை சந்தைகளில் நடக்கும் விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் 20 சதவீத தொகை, வேலை செய்த சிறைவாசிகளுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு கைதிகள் செய்த பொருட்களை விற்பனை செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருக்கிறது. செய்த குற்றத்துக்காக கைதிகளுக்கு வெறும் தண்டனை மட்டும் கொடுத்து விடுதலை செய்யாமல், கல்வியறிவு புகட்டி, சிறையில் இருக்கும்போதே ஏதாவது தொழிலையும் கற்றுக் கொடுத்து, அதனை செய்யவும் வைத்து அனுபவமிக்கவர்களாகவும் மாற்றி, அதற்காக ஊதியமும் கொடுக்கப்படுகிறது. இதனால் தண்டனை காலத்தை வேதனையுடன் கழித்துவிட்டு விடுதலையாகும்போது வாழ்க்கை சக்கரத்தை ஓட்டுவதற்காக கையில் ஒரு தொழிலும், அதை தொடங்குவதற்கு தான் சம்பாதித்த பணத்துடன் வெளியே வரும் சிறைவாசிகள், புதிய காற்றை சுவாசித்து சமுதாயத்தில் பொறுப்புள்ள நன்மதிப்புடைய குடிமக்களாக வலம் வருவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

1 More update

Next Story