தனியார் முதலீடும், வேலைவாய்ப்பும் தான் வளர்ச்சி

மத்திய அரசாங்கம் பட்ஜெட்டில் வருமானவரியை குறைத்திருக்கிறது.
இந்த ஆண்டில் மத்திய அரசாங்கம் பட்ஜெட்டில் வருமானவரியை குறைத்திருக்கிறது. அதுபோல் ஜி.எஸ்.டி.யும் 5, 12, 18, 28 சதவீதங்களாக இருந்த விகிதங்கள் 5 மற்றும் 18 சதவீதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் உள்நாட்டில் இவ்வாறு மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்திய பொருளாதாரம் ஒரு கடும்புயலில் நின்று கொண்டிருக்கும் சூழலில் உள்ளது. இதற்கு காரணம் அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத கூடுதல்வரிதான். மற்ற அனைத்து நாடுகளைவிட, இந்தியாவுக்கு அதிகவரியை அமெரிக்கா விதித்துள்ளதால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் மற்ற நாடுகளோடு நம்மால் போட்டிப்போட முடியவில்லை.
சரி பரவாயில்லை. மற்ற நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதிசெய்ய இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கலாம் என்ற நோக்கத்தோடு, அதற்காக ரூ.25 ஆயிரத்து 60 கோடி ஒதுக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், ஏற்றுமதியாளர்களுக்கு 100 சதவீத கடன் உத்தரவாத காப்பீட்டை வழங்குவதற்காக, தகுதியான ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் கோடி வரை கூடுதல் கடன்வசதிகளையும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் குறைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரியின் பயனாக உள்நாட்டு தேவையை அதிகரிக்கவும், மத்திய அரசாங்கம் முனைப்புடன் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசு உள்பட அனைத்து மாநில அரசுகளும் உள்நாட்டு நுகர்வை மேம்படுத்த களத்தில் இறங்கியிருக்கின்றன. இது மத்திய, மாநில அரசாங்கங்களின் முயற்சியென்றாலும், குறைந்துவரும் விலைவாசி மற்றும் பருவமழையும் மக்களின் நுகர்வை அதிகரிக்க துணைநிற்கின்றன.
நல்ல பருவமழையும், ராபி மற்றும் காரிப் சாகுபடிக்கு அரசு உயர்த்தியுள்ள குறைந்தபட்ச ஆதாரவிலையும், அரசுகள் மேற்கொள்ளும் பயிர்க்கொள்முதலும் கிராமப்புற மக்களின் வருமானத்தை பெருக்கியுள்ளது. இதற்கு இந்த ஆண்டு அபரிமிதமாக அதிகரித்துள்ள டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன விற்பனையே சாட்சி. இதுமட்டுமல்லாமல், தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகரித்ததற்கும் ஆதாரமாக உற்பத்தித்துறை வளர்ச்சி காணப்படுகிறது. இதனால் தீபாவளி நேரத்தில் அனைத்து பொருட்களின் விற்பனையும் பெருமளவில் உயர்ந்து, ஜி.எஸ்.டி. வசூலிலும் சாதனை படைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மூலதனச்செலவுகள் உயர்ந்திருப்பதும் நல்ல சூழ்நிலையை காட்டுகிறது.
இதற்கெல்லாம் மேலாக, குடும்பங்களின் வருமானம் உயர்ந்தால்தான் உண்மையான வளர்ச்சியை மக்கள் உணரமுடியும். ஆனால் குடும்பங்களில் தற்போது வருமானத்தில் உயர்வு இல்லை. ஐ.டி. நிறுவனங்களில் வேலையிழப்பு அதிகரித்திருப்பதும், அதிக வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களில் அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்பட்ட உற்பத்திக்குறைப்பும் வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதால் குடும்பங்களில் வருமானக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்ய, வேலைவாய்ப்பு தரும் தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட, அவர்களுக்கு அதிக ஊக்கங்கள் அளிக்கப்படவேண்டும். அண்டைமாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில், ரூ.45 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு அறிவித்துள்ளார். கடந்த 18 மாதங்களில் ஏற்கனவே 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான ரூ.20 லட்சம் கோடி முதலீடுகள் கைக்கு வந்துவிட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஆந்திரா, தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆக, மொத்தத்தில் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி வேகமாக உருவெடுக்க வேண்டுமெனில் தனியார் முதலீடும், வேலைவாய்ப்பும் பெருகும் வகையிலான முன்னேற்றமும் ஏற்பட்டால்தான் முடியும். உண்மையான வளர்ச்சி அதில்தான் இருக்கிறது.






