ரெயிலில் இருந்து தாக்கும் ஏவுகணை

அக்னி ஏவுகணைகளின் பிதா மகன் மறைந்த ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் என்பதில் ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை உண்டு.
நமது நாடு இப்போது பாதுகாப்புக்காக அதிக அக்கறையுடன் அமைதியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மிக்-21 ரக போர் விமானங்களுக்கு விடை கொடுத்தவுடன் அது வலம் வந்த இடத்தில் தேஜஸ் போர் விமானங்களை இறக்கியுள்ளது. நாட்டின் எல்லை பகுதிகளில் இப்போது ரெயில் போக்குவரத்துக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 13-ந்தேதிகூட இதுவரையில் ரெயிலை கண்டிராத வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் மலையிலும், பள்ளத்தாக்கிலுமாக 51 கிலோ மீட்டருக்கு 48 குகைகளை கடந்து செல்லும் வகையில் ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆக நாட்டின் பாதுகாப்பில் ரெயில் பாதையும் முக்கிய பங்கு வகிக்கும் வகையில் எல்லைப்புறங்களுக்கு இப்போது எளிதில் ரெயில் மூலமும் செல்லும் வசதி இருக்கிறது.
அந்த வகையில், ரெயிலிலேயே அக்னி பிரைம் ஏவுகணையை ஏற்றிக்கொண்டு செல்லவும், அப்படி போய் கொண்டு இருக்கும்போதே 2,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஏவுகணையை ஏவவும் முடியும். இதுபோல ரெயிலில் இருந்து ஏவுகணையை ஏவும் திறன் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்குத்தான் இருக்கிறது. எல்லா துறைகளிலுமே இந்த நாடுகளுக்கு இணையாக பட்டியலில் இருக்கும் இந்தியா இப்போது ஓடும் ரெயிலில் இருந்து ஏவுகணையை ஏவும் வல்லமையிலும் அந்த நாடுகளின் வரிசையில் சேர்ந்து விட்டது. அக்னி பிரைம் ஏவுகணை மிக ரகசியமாக ரெயிலில் ஏற்றிக்கொண்டு போய் சோதனை நடத்தப்பட்டது.
இந்த ஏவுகணையை எதிரி நாட்டு செயற்கைக்கோளால் கூட கண்டுபிடிக்க முடியாது. அக்னி பிரைம் ஏவுகணையின் சிறப்பு என்னவென்றால் எங்கெல்லாம் ரெயில் பாதை இருக்கிறதோ, அங்கெல்லாம் எளிதாக கொண்டு சென்று எதிரி நாட்டின் இலக்கை குறி வைத்து அழிக்க முடியும். குறுகிய காலத்தில் இந்த ஏவுகணைகளை கொண்டு சென்று தாக்குதலை நடத்த முடியும். ரகசியமாக குகைகளில் பதுக்கி வைத்துவிட்டு தேவைப்படும் நேரத்தில் மட்டும் ரெயிலில் ஏற்றி சென்று தாக்குதல் தொடுக்க முடியும். ரெயில் செல்லும்போது மின்சாரம் தடைபட்டால் கூட டீசலை கொண்டு இந்த ஏவுகணையை எதிரி நாடுகள் மீது ஏவ முடியும். இதுவரையில் இந்தியாவிடம் 6 வகையான அக்னி ஏவுகணைகள் இருக்கின்றன. இந்த ஏவுகணைகளெல்லாம் தரையில் மோட்டார் வாகனங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏவுதளங்களில் இருந்தும், கடலில் கப்பல்களில் அமைக்கப்பட்டுள்ள ஏவு தளங்களில் இருந்தும் மட்டுமே ஏவமுடியும்.
இப்போது முதல் முறையாக ரெயிலில் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அக்னி ஏவுகணைகளின் பிதா மகன் மறைந்த ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் என்பதில் ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை உண்டு. அவரை திட்ட இயக்குனராக கொண்டுதான் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் இதனை வடிவமைத்தது. எல்லா ஏவுகணைகளுமே அக்னி 1, 2, 3, 4, 5, 6 என்றே அழைக்கப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் தாக்குதல் தூரம் வேறுபடுகிறது. இந்தியா வான்வழி பாதுகாப்பு கேடயமாக சுதர்சன சக்ரா என்ற திட்டத்தை செயலுக்கு கொண்டு வந்துள்ளது. அதில் இந்த அக்னி பிரைம் ஏவுகணை முக்கிய அங்கமாக விளங்குகிறது. இப்போது 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை ஏவ முடியும் என்றாலும், விரைவில் இந்த இலக்கு தூரம் பல மடங்கு அதிகரிக்கப்பட இருக்கிறது. ரெயில் மூலம் அக்னி ஏவுகணையை ஏவும் இந்த சோதனை முழுமையாக வெற்றி பெற்றுள்ளதால், விரைவில் இது இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும்.






