புதுப்பொலிவு பெற்ற ரெயில் நிலையங்கள்


புதுப்பொலிவு பெற்ற ரெயில் நிலையங்கள்
x

புனரமைக்கப்பட்ட 103 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

மக்களின் அன்றாட போக்குவரத்தில் முக்கிய அங்கமாக இருப்பது ரெயில்தான். ரெயில் சேவையை தினமும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமல்ல நமது பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகவும், அடையாளமாகவும் ரெயில்வே திகழ்கிறது. ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுப்பது மிக மிக அவசியமாக இருக்கிறது. 'வளமான இந்தியாவின் அமிர்த நிலையங்கள்' (அம்ரித் பாரத்) என்ற திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் உள்ள 1,300 ரெயில் நிலையங்களை அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக புனரமைக்க திட்டம் தீட்டப்பட்டது. இதில் முதல் கட்டமாக 508 ரெயில் நிலையங்களை ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் புனரமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் 103 ரெயில் நிலையங்களில் இந்த பணிகள் முடிவடைந்துவிட்டதால் அவற்றின் திறப்பு விழா கடந்த 22-ந்தேதி நடைபெற்றது.

ராஜஸ்தானில் உள்ள பிகானீரில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி புனரமைக்கப்பட்ட 103 ரெயில் நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்த 103 ரெயில் நிலையங்களில் தமிழ்நாட்டில் பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், போளூர், குழித்துறை ஆகிய ரெயில் நிலையங்களும் இடம் பெற்றுள்ளன. இதில் பரங்கிமலை ரெயில் நிலையம் ரூ.11.05 கோடியிலும், சாமல்பட்டி ரெயில் நிலையம் ரூ.8 கோடியிலும், ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் ரூ.6.77 கோடியிலும், திருவண்ணாமலை ரெயில் நிலையம் ரூ.8.27 கோடியிலும், போளூர் ரெயில் நிலையம் ரூ.6.15 கோடியிலும், சிதம்பரம் ரெயில் நிலையம் ரூ.5.96 கோடியிலும், விருத்தாசலம் ரெயில் நிலையம் ரூ.9.17 கோடியிலும், மன்னார்குடி ரெயில் நிலையம் ரூ.4.69 கோடியிலும், குழித்துறை ரெயில் நிலையம் ரூ.5.96 கோடியிலும் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன.

இந்த ரெயில் நிலையங்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் தங்கும் அறை, ஓய்வு அறை, குழந்தைகள் காப்பறைகள், எஸ்கலேட்டர்கள், லிப்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், உள்ளூர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகப்பு, வை-பை வசதிகள், தண்ணீர் ஏ.டி.எம்.கள்., உணவு விடுதிகள், மேம்படுத்தப்பட்ட டிக்கெட்டு வழங்கும் வசதிகள், நவீனப்படுத்தப்பட்ட கழிப்பறை வசதிகள் அமைத்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை ரெயில்நிலையத்தில் அங்குள்ள கோவில்களை பிரதிபலிக்கும் முகப்புகள் எழில் நயத்தோடு அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 9 ரெயில்நிலையங்கள் மட்டும் அமிர்த நிலையங்களாக மேம்படுத்தப்பட்டு நவீன வசதிகள் செய்துகொடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்றாலும் உத்தரபிரதேசத்தில் 19, குஜராத்தில் 18, மராட்டியத்தில் 15 ரெயில் நிலையங்களை அமிர்த நிலையங்களாக அறிவித்து அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு ரெயில்வேக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் மாநிலங்களில் ஒன்று ஆகும். அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள பல ரெயில் நிலையங்களை இந்த பட்டியலில் சேர்க்க, குறிப்பாக நமது எம்.பி.க்கள் அனைவரும் அவரவர் தொகுதியில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தையாவது அமிர்த ரெயில் நிலையங்களாக்க ஓங்கி குரல் கொடுக்கவேண்டும்.

பிரதமர் மோடி இந்த ரெயில்நிலையங்களை திறந்துவைத்து பேசும்போது, "அமிர்த ரெயில் நிலையங்கள் வசதிகளையும், இணைப்பையும் மேம்படுத்தி நமது புகழ்மிக்க கலாசாரத்தை கொண்டாடும்" என்றார். அந்தவகையில், நமது கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பல ஊர்கள் இருக்கின்றன. அந்த ஊர்களில் உள்ள ரெயில் நிலையங்களை அமிர்த ரெயில் நிலையங்களாக மேம்படுத்துவதற்கு ரெயில்வே நிர்வாகம் முன்வரவேண்டும்.

1 More update

Next Story