ரெயில் பயணத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு

பெண்கள் பெட்டியில் பெண் காவலர் பாதுகாப்புக்காக வரவேண்டும் என்று பெண் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை,
ரெயில்கள் பாதுகாப்பானது என்று நம்பியே தனியாக செல்லும் பெண்கள் ரெயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். ஆனால் இப்போது ரெயில் பயணங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தொலைதூர ரெயில்களில் மட்டுமல்லாமல் மின்சார ரெயில்களில் நடக்கும் சம்பவங்களும் நிரூபித்துக்கொண்டு இருக்கிறது. கடந்த 6-ந்தேதி கோவை-திருப்பதி 'இன்டர்சிட்டி' எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்கள் பெட்டியில் 36 வயதான ஒரு பெண் சென்று கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற 7 பெண்கள் எல்லாம் ஜோலார்பேட்டை வந்ததும் இறங்கி சென்ற பிறகு அந்த பெண் மட்டும் தனியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது காலை 10.15 மணியாகும். அவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
ரெயில் புறப்பட்ட உடன் ஒரு வாலிபர் அந்த பெட்டியில் ஏறியதும், அந்த பெண் அவரிடம் இது பெண்கள் பெட்டி என்று சொன்னாலும் அவர் அதை பொருட்படுத்தாமல் தன் உடைகளையெல்லாம் கழற்றிவிட்டு, அந்த பெண்ணின் உடைகளையும் கழற்ற முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அந்த வாலிபரை காலால் எட்டி உதைத்துவிட்டு அபாய சங்கிலியை பிடித்து இழுக்க முயற்சி செய்தார். உடனே ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், கர்ப்பிணி பெண்ணின் தலையை பிடித்து இழுத்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதனால் கை கால்களில் காயம் அடைந்து சுய நினைவு இல்லாமல் கிடந்த அந்த பெண்ணை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணின் கருவும் கலைந்துவிட்டது.
ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த ரெயில்வே போலீசார் இந்த குற்றத்தை செய்த வேலூர் மாவட்டம் பூஞ்சோலை கிராமம் சின்ன நாவல் பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஹேமராஜ் என்று கண்டுபிடித்து கைது செய்தனர். ரெயில்வே பாதுகாப்பு படையும், தமிழக காவல்துறையை சேர்ந்த ரெயில்வே போலீஸ் படையும் இருக்கிறது. இந்த இரண்டிலுமே பெண் போலீசார் இருக்கிறார்கள். ஆனால் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் போலீசாரும் இல்லாத நிலை இருந்திருக்கிறது. ரெயில் பெட்டிகளில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக 'எனது தோழி' என்று கூட ஒரு திட்டம் இருக்கிறது. மேலும் அவசர காலத்துக்கு 139 என்ற உதவி எண்ணும் இருக்கிறது.
இவ்வளவு இருந்தும் இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்றால் பாதுகாப்பில் குறைவா?, டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது டிக்கெட் பரிசோதகர்களின் கடமை தவறியதா?, பெண்கள் பெட்டி கார்டுவேனை ஒட்டியே இருப்பதால் அவர் கவனிக்க தவறிவிட்டாரா? என்று பல கேள்விகள் எழுகின்றன. இந்த சம்பவம் நடந்த பிறகு பெண்கள் பெட்டியில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் 'தினத்தந்தி' சார்பில் பேட்டி எடுக்கப்பட்டபோது பல பெண்கள், பெண்கள் பெட்டியில் பெண் காவலர் பாதுகாப்புக்காக வரவேண்டும், அந்த பெட்டியில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி கண்காணிக்கவேண்டும், அவசர காலத்தில் தொடர்புகொள்ள எளிதான உதவி எண்கள் ஏற்படுத்தி தரவேண்டும், பெண்களும் தனியாக பயணம் செய்யும் நிலை ஏற்படும்போது அங்கு இருந்து இறங்கி பொதுப்பெட்டியில் ஏறிக்கொள்ள வேண்டும், மின்சார ரெயில்களில் டிரைவர், கார்டுகளோடு 'டாக் பேக்' அதாவது ஒரு பட்டனை அழுத்தினால் அவர்களே உடனடியாக என்ன விஷயம் என்று கேட்கும் வகையிலான தொடர்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று சொன்னதையெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிக்கவேண்டும்.






