கடைகளில் சுதேசி பொருட்கள் விற்பனை ‘போர்டு’

வியாபாரிகள் அனைவரும் தங்கள் கடைகளுக்கு வெளியே எங்கள் கடையில் சுதேசி பொருட்களை விற்கிறோம் என்ற போர்டுகளை வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே அனைவரும் வாங்கவேண்டும் என்ற வகையில் சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தி ‘சுதேசி’ இயக்கத்தை தொடங்கி தீவிர பிரசாரம் செய்தார். அதைத்தொடர்ந்துதான் தூத்துக்குடியில் சுதேசி கப்பலை சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஓட்டி இன்றளவும் கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படுகிறார். அடுத்து நெருக்கடி நிலையின்போது இந்திராகாந்தி, “இந்தியனாக இரு, இந்திய பொருட்களையே வாங்கு” என்ற கோஷத்தை முன்னெடுத்து எல்லோரும் இந்திய பொருட்களையே வாங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆக சுதேசி பொருட்களையே வாங்கவேண்டும் என்ற உணர்வு மக்கள் மனதில் விதைக்கப்பட்டாலும் அது செடியாகவோ, மரமாகவோ வளரவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பொருட்களுக்கு வரிசையாக அதிக வரி விதித்துக்கொண்டு இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் அனைவரும் சுதேசி பொருட்களையே வாங்கவேண்டும் என்ற ஒரு பிரகடனத்தை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்த கருத்தை நீண்ட நெடுங்காலமாகவே அவர் வலியுறுத்தி வருகிறார். ஆகஸ்டு 15-ந்தேதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்துவிட்டு ஆற்றிய உரையின்போது, வியாபாரிகள் அனைவரும் தங்கள் கடைகளுக்கு வெளியே எங்கள் கடையில் சுதேசி பொருட்களை விற்கிறோம் என்ற போர்டுகளை வைக்கவேண்டும் என்று கூறினார். சுதேசி பொருட்களைத்தான் வாங்கவேண்டும் என்று மக்கள் மனதில் முடிவு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் திங்கட்கிழமை பா.ஜனதா தொண்டர்களிடம் பேசும்போது, ஒவ்வொரு கடையிலும் சுதேசி பொருட்கள் இங்கு விற்கப்படுகின்றன என்ற போர்டு வைக்கப்பட்டுள்ளதை பா.ஜனதா தொண்டர்கள் உறுதி செய்யவேண்டும். வெளிநாட்டு பொருட்களை மக்கள் எவ்வளவு குறைவாக சார்ந்து இருக்கிறார்களோ அது நமது நாட்டுக்கு நல்லது என்று அழுத்தம் திருத்தமாக பேசியிருக்கிறார்.
பா.ஜனதா தொண்டர்களை சுதேசி பொருட்கள் விற்பனைக்கான போர்டு வைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய கேட்டுக்கொள்வதற்கு பதிலாக அரசு உத்தரவிட்டால் அனைவரும் இதை முழுமையாக செயல்படுத்துவார்கள். இதெல்லாம் சரிதான். வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதித்துவிட்டு, அதற்கு வரியும் விதித்துவிட்டு உள்நாட்டில் விற்பனைக்காக வந்தபிறகு அதை வாங்காதே என்று சொல்வது மக்களுக்கு திகைப்பாக இருக்கிறது. மேலும் பல வெளிநாட்டு கம்பெனிகள் நம் நாட்டிலேயே தொழிற்சாலைகளை நிறுவி பொருட்களை உற்பத்தி செய்கின்றன. பல நிறுவனங்கள் மோட்டார் வாகன தொழிற்சாலைகளை நிறுவி கார்களை உற்பத்தி செய்து, விற்பனைக்கு கொண்டு வந்து விட்டன. கோகோ கோலா போன்ற தொழிற்சாலைகள் குளிர்பானங்கள் உற்பத்தி செய்து, அவற்றை கடைகளில் விற்பனைக்கு வைத்திருக்கின்றன.
மேலும் பல நுகர்வோர் பொருட்களை வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்து இங்கேயே விற்பனை செய்கின்றன. இந்த பொருட்கள் வெளிநாட்டு பொருட்கள் பட்டியலில் வருமா? அல்லது சுதேசி பொருட்கள் பட்டியலில் வருமா? என்பது குறித்து மக்களுக்கு இருக்கும் குழப்பத்தை மத்திய அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும். இதுமட்டுமல்லாமல் பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானது. இங்குள்ள பயன்பாட்டினால் கிடைக்கும் லாபத்தை வெளிநாடுகளுக்குத்தான் கொண்டு செல்கிறார்கள். அந்த வெளிநாட்டு சமூக வலைத்தளங்களில்தான் நம் நாட்டு மந்திரிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் தங்கள் அறிக்கைகள், செய்திகளை பதிவு செய்கிறார்கள். இதில் சுதேசி பொருட்கள் நெறி வராதா? என்பதும் மக்களின் கேள்வியாக இருக்கிறது. மொத்தத்தில் சுதேசி பொருட்கள் குறித்த தெளிவான விளக்கத்தை நாடு எதிர்பார்க்கிறது.






