பொது இடங்களில் தெரு நாய்களுக்கு இடம் இல்லை

டெல்லியில் சிறு குழந்தையை தெரு நாய்கள் கடிக்கும் செய்தியை பத்திரிகையில் பார்த்த சுப்ரீம் கோர்ட்டு தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.
‘‘ஆல் ரோட்ஸ் லீட் டு ரோம்’’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது எல்லா சாலைகளும் ரோமாபுரியை நோக்கி என்பது தான் இதன் பொருள். அதுபோல கடந்த சில நாட்களாக நாட்டு மக்கள் அனைவரும் கடந்த 7-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தெரு நாய்கள் தொல்லை குறித்து என்ன தீர்ப்பு வழங்கப்போகிறார்களோ? என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். காரணம், தெரு நாய்களால் சாலைகளில் செல்லும் மக்கள் அடைந்த துன்பமும் துயரமும் சொல்லமுடியாத வகையில் இருந்தது. தந்தி டி.வியை பார்த்தால் தினமும் தமிழ்நாட்டின் ஏதாவது பகுதியில் சாலைகளில் செல்லும் குழந்தைகள், பெண்கள், பெரியவர்களை தெரு நாய்கள் விரட்டி விரட்டி பாய்ந்து பாய்ந்து கடிக்கும் காட்சிகள் மிகுந்த அச்சத்தை பார்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்துகிறது.
காலையில் நடை பயிற்சி செல்பவர்கள் நிலையோ அதைவிட மோசமானது. தெரு நாய்கள் சாலைகளில் பண்ணி வைத்து இருக்கும் அசிங்கங்களை மிதித்து விடக்கூடாது என்று தாண்டி, தாண்டி நடப்பது, எந்த நேரத்தில் தெரு நாய்கள் கடிக்க வருமோ? என்று பயந்து பயந்து நடப்பதுமாக, நடை பயிற்சியை எந்த நோக்கத்துக்காக செய்கிறோமோ? அந்த நோக்கம் சற்று கூட நிறைவேறாத நிலை இருக்கிறது. டெல்லியில் சிறு குழந்தையை தெரு நாய்கள் கடிக்கும் செய்தியை பத்திரிகையில் பார்த்த சுப்ரீம் கோர்ட்டு தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் 7-ந் தேதி வெளியிட்ட இடைக்கால தீர்ப்பு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
நாய்கடி சம்பவங்களால் ஏற்பட்டு வரும் மனதை சங்கடப்படுத்தும் நிகழ்வுகள் குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், அனைத்து கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பஸ் நிலையங்கள், டெப்போக்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் இருக்கும் தெரு நாய்களை பொதுமக்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக அகற்ற வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் அந்த இடங்களில் பிடிக்கப்படும் நாய்களை மீண்டும் அந்த இடங்களிலேயே விட்டு விடாத வகையில் காப்பகங்களில் அடைக்க வேண்டும். அதற்கு கருத்தடை செய்து தடுப்பூசிகள் போட்டு பராமரிக்க வேண்டும். இதற்கு உள்ளாட்சி அமைப்புகள் முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டு தெருநாய்கள் அகற்றிய விவரத்தை 8 வாரங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
தெரு நாய்கள், இந்த வளாகங்களுக்குள் நுழையாதபடி வேலிகள், சுற்றுச்சுவர்கள், கதவுகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதுகுறித்து அடுத்த விசாரணை ஜனவரி 13-ந் தேதி நடக்கும். அப்போது மேற்கொண்டு புதிய உத்தரவுகளும் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர். எல்லா இடங்களையும் சொன்ன நீதிபதிகள் மக்கள் நடை பயிற்சி செல்வதற்காக தினமும் செல்லும் கடற்கரைகள், பூங்காக்கள் ஆகிய இடங்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை என்ற மனக்குமுறல் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் கடைவீதிகள் பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும் இந்த இடைக்கால தீர்ப்பை பெரிதும் வரவேற்கும் பொது மக்கள் இறுதி தீர்ப்பு தெரு நாய் தொல்லையை முற்றிலும் அகற்றி விடும் என்ற பலத்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.






