தாய்ப்பால் தானத்தில் தமிழக பெண்கள் சாதனை


தாய்ப்பால் தானத்தில் தமிழக பெண்கள் சாதனை
x

22 மாதங்களில் 300.17 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்துள்ள செல்வ பிருந்தா தியாக சுடராக ஒளி வீசுகிறார்.

உலக தாய்ப்பால் வாரம் கடந்த வாரம் அனுசரிக்கப்பட்டது. பச்சிளம் குழந்தை அழுகுரலோடு இந்த பூமி பந்தை கண்விழித்து பார்த்ததும் நாவில் உணரும் முதல் சுவையே தாய்ப்பால் தான். திரவ தங்கம் என்று போற்றப்படும் தாய்ப்பால் என்பது பெண்களுக்கு இயற்கையாகவே கிடைத்த வரம். பிரசவமும், தாய்ப்பாலும்தான் பெண்மையின் அடையாளம் ஆகும். உலகில் பெரும்பாலான பொருட்களுக்கு மாற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தாய்ப்பாலுக்கும், ரத்தத்துக்கும் இன்னும் யாராலும் மாற்று கண்டுபிடிக்கமுடியவில்லை. இவை இரண்டும் இயற்கையின் அருட்கொடையாகும். தாய்ப்பால் என்பது இளந்தளிர்களை வாழவைக்கும் புனிதமான உணவாகும். பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்பது டாக்டர்களின் ஆலோசனையாகும். குழந்தை பிறந்த உடன் அது தானாகவே தாய்ப்பால் குடிக்க தொடங்கிவிடுகிறது.

தாய்ப்பால் மற்ற எல்லா உணவுகளையும்விட உன்னதமான சத்தான உணவாகும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு, நோய்கள் வராமல் தடுக்கும் அரணாகவும் விளங்குகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகின்றன. இப்படி தெய்வீக தன்மைகொண்ட தாய்ப்பால் துரதிர்ஷ்டவசமாக சில குழந்தைகளுக்கு இயற்கையாகவே கிடைக்காமல் போய்விடுகிறது. தாய் உயிரிழந்து விடும் நேரத்திலும், இயற்கையாகவே சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்காமல் இருந்தாலும், நோய் பாதிப்பு இருந்தாலும் தாய்ப்பால் குழந்தைக்கு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதேபோல ஆதரவற்ற குழந்தைகள், தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள், குடும்பத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் தாய்ப்பாலுக்காக தவிக்கும் சூழல் உள்ளது.

இத்தகைய காரணங்களால் தாய்ப்பால் கிடைக்காத பிஞ்சு குழந்தைகளுக்கு வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட மனிதநேயமிக்க திட்டம்தான் தாய்ப்பால் வங்கி திட்டம். தன்னுடைய குழந்தையின் தேவைக்கு அதிகமாக சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பது உண்டு. அதை வீணாக்காமல் தாய்ப்பாலுக்கு ஏங்கும் குழந்தைகளுக்கு தானமாக கொடுப்பதற்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டம்தான் தாய்ப்பால் வங்கி திட்டம். இப்போது அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தாய்ப்பால் வங்கி இருக்கிறது. இங்கு தானமாக பெறப்படும் தாய்ப்பால் பல குழந்தைகளின் பசி பிணியை போக்கி, வாழ்வளித்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் கடந்த 2024-25-ம் நிதியாண்டில் மட்டும் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள 19 தாய்ப்பால் வங்கிகளில் மொத்தம் 5 லட்சத்து 41 ஆயிரத்து 86 முறை தாய்மார்கள் தங்கள் தாய்ப்பாலை தானமாக கொடுத்து இருக்கிறார்கள். அதன் மூலம் 88 லட்சத்து 48 ஆயிரத்து 798 மில்லி லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டு, அதன் மூலம் 50 ஆயிரத்து 847 குழந்தைகள் பலன் பெற்று இருக்கிறார்கள்.

அதில் திருச்சி மாவட்டம் காட்டூரை சேர்ந்த செல்வ பிருந்தா என்ற 33 வயது பெண் தனக்கு 2 குழந்தைகள் இருந்தாலும், தேவைப்படும் மற்ற குழந்தைகளுக்காக கடந்த 22 மாதங்களில் மட்டும் 300.17 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து தியாக சுடராக ஒளி வீசுகிறார். இவ்வாறு பல குழந்தைகளுக்கு உயிர் கொடுத்து வாழ்வளித்துள்ள செல்வ பிருந்தாவின் மனிதாபிமான செயல் இந்திய சாதனை புத்தகத்திலும், ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்த மாதரசியை பின்பற்றி தங்கள் குழந்தைகளின் தேவைக்கு அதிகமாக தாய்ப்பால் சுரக்கும் பெண்கள், இதுபோல தானம் வழங்கி மற்ற குழந்தைகளையும் தன் குழந்தை போன்று பேணி வாழ்வளித்தால் அந்த பிஞ்சு மலர்களும் உடல் வளர்த்து மணம் வீசும்.

1 More update

Next Story