சிறு தொழில்களுக்கு எதிர்காலம்


சிறு தொழில்களுக்கு எதிர்காலம்
x

விவசாயம் 25 கோடியே 40 லட்சம் பேருக்கு வேலை வழங்கி வருகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, நாட்டின் வளர்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் என்ற எம்.எஸ்.எம்.இ. பெரும் பங்கு வகித்து வருகின்றன. கனரக தொழில்கள் என்பது முழுக்க முழுக்க எந்திரமயமான தொழில்களாகும். இப்போது செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களும் கூட கனரக தொழில்களில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. ஆனால் கனரக தொழில்களை விட குறு, சிறு, நடுத்தர தொழில்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளன. இவைதான் நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக திகழ்கின்றன. இந்த தொழில்களில்தான் பெரிய அளவில் வேலைவாய்ப்பு இருக்கிறது மட்டுமல்லாமல், உற்பத்தி பொருட்களின் அளவும் மிகுந்து காணப்படுகிறது. இந்தியா முழுவதும் 6 கோடியே 71 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் 22 கோடியே 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில் மொத்தம் 56 கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இதில், விவசாயம் 25 கோடியே 40 லட்சம் பேருக்கு வேலை வழங்கி வருகிறது. ஆக மொத்த தொழிலாளர்களில் 45 சதவீதம் பேர் விவசாய பணிகளில்தான் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக, 39 சதவீதம் பேருக்கு குறு, சிறு, நடுத்தர தொழில்கள்தான் வேலைவாய்ப்பை வழங்குகின்றன.

நாட்டின் மொத்த ஜிடிபியில் குறு, சிறு, நடுத்தர தொழில்களின் பங்கு 30 சதவீதமாகும். அதேபோல நாட்டின் மொத்த உற்பத்தியில் 36 சதவீத பங்கு இந்த தொழில்களுக்கே. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 45 சதவீதம் பொருட்கள் இந்த தொழில்களால் தயாரிக்கப்பட்டவைதான்.

இந்த பிரிவு தொழில்களில், தமிழ்நாட்டில் மட்டும் 33 லட்சத்து 96 ஆயிரம் குறு தொழிற்சாலைகள் உள்ளன. எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களில் 98.16 சதவீதம் குறு நிறுவனங்களே ஆகும். மேலும் 55 ஆயிரத்து 953 சிறு நிறுவனங்களும், 5,108 நடுத்தர நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. குறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள குறு நிறுவனங்கள்தான் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதோடு, மொத்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதியிலும் கணிசமான பங்கு வகிக்கின்றன. ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரி காரணமாக இந்த எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த தொழில்களுக்கு மத்திய அரசு அதிக சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள ஜி.எஸ்.டி. மாற்றங்கள் இந்த தொழில்களை வளர்க்கும் வகையிலும், அமெரிக்காவின் வரி விதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையிலும், ஏற்றுமதிக்கு உதவும் வகையிலும், பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும் அமைந்துள்ளன. இந்த தொழில்களுக்கு தேவையான எந்திரங்கள் பெரும் செலவாகும். இப்போது அந்த எந்திரங்களுக்கான 28 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கான வரியை ரீபண்ட் பெறுவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. மேலும், சரக்கு வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட 28 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டதால், இனி குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு வளர்ச்சியை நோக்கி செல்வதற்கான ஏறுமுகம்தான்.

1 More update

Next Story