வரலாறு படைத்த மேட்டூர் அணை

இந்த ஆண்டில், இதுவரை மேட்டூர் அணை 120 அடி என்ற முழு கொள்ளளவை 7 முறை எட்டி, புது வரலாறு படைத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந்தேதிதான் தொடங்கியுள்ளது. இன்னும் இதன்காலம் டிசம்பர் மாதம் வரை ஏன் ஜனவரி வரைகூட நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தொடங்கிய இந்த சிலநாட்களிலேயே பெரும்பான்மையான நீர்த்தேக்கங்கள் நிரம்பிவழியும் நிலையில் இருக்கிறது. இன்னும் மழைபெய்யும் நேரத்தில் தேக்கிவைக்க வழியில்லாமல் திறந்துவிடும் நீர் கடலில்போய் வீணாகத்தான் கலக்கும். இதனை முறையாக தேக்கிவைக்க வசதியிருந்தால் தமிழ்நாடு வளமிக்க மாநிலமாக திகழும் என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழ்நாட்டில் மொத்தம் 90 முக்கியமான நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. இதன் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி.யாகும். ஆனால் தற்போதே 200 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 89.28 சதவீதமாகும். சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.22 டி.எம்.சியாகும் நேற்று காலை 8 மணியளவில் 10.27 டி.எம்.சி தண்ணீர் கையிருப்பில் இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 6 டி.எம்.சி தண்ணீர்தான் இருந்தது. பெரிய நீர்த்தேக்கங்களை பொறுத்தமட்டில், 16 நீர்த்தேக்கங்கள் முழுகொள்ளளவோடு நீர் நிரம்பியுள்ளது.
குறிப்பாக காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி 13 பாசன மாவட்டங்களை வளப்படுத்துகிறதென்றால் அதற்கு மூலகாரணமாக விளங்குவது சேலத்தில் உள்ள மேட்டூர் அணைதான். இதுதான் ‘ஸ்டான்லி நீர்த்தேக்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது. 1934-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதி என்றால் அது கர்நாடக மாநிலம்தான். மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு காவிரி பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் மொத்த உயரம் 120 அடியாகும். முழுகொள்ளளவு 93.47 டி.எம்.சி.யாகும். இந்த ஆண்டு இதுவரையிலேயே 7 முறை நிரம்பி அதாவது, 120 அடியை எட்டி, புது வரலாறு படைத்துள்ளது. இதற்கு முன்பு 2005-ல் 6 முறை நிரம்பியதுதான் சாதனையாக இருந்தது. இந்த ஆண்டு அது தகர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டின் மற்றொரு சிறப்பம்சம் கடந்த 23-10-2024 முதல் இன்று வரை அதாவது, ஓராண்டுக்கும் மேல் 100 அடிக்கு மேல் தண்ணீர் நின்று கொண்டேயிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையொட்டி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி, கர்நாடகா ஒவ்வொரு ஆண்டும்
177.25 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற கணக்கில், கடந்த 16-ந்தேதிவரையிலான நிலவரப்படி 133.57 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடவேண்டிய நிலையில் 260.15 டி.எம்.சி அதாவது, 126.58 டி.எம்.சி அதிகமாக திறந்து விட்டிருக்கிறது. இதுவும் 7-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இன்னும் 2 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் இன்னும் எவ்வளவு மழை பெய்யுமோ தெரியவில்லை.
மேட்டூர் அணை, முழு கொள்ளளவில் இருப்பதால் அதனை வைத்து பாசன வசதி பெறும் டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு குறுவை சாகுபடி வரலாற்றில் இல்லாத அளவிற்கு 6.15 லட்சம் ஏக்கராக இருக்கிறது. அது கடந்தாண்டு 3.25 லட்சம் ஏக்கர் என்ற அளவில்தான் இருந்தது.
தற்போது மழையின் பாதிப்பை தவிர்க்கவும், வீணாக கடலில் போய் தண்ணீர் கலப்பதை தடுக்கவும் ஒரு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு ஒரு தொலைநோக்கு திட்டத்தை வகுக்கவேண்டும்.






