வந்தே மாதரம் பாடலுக்கு வயது 150

வந்தே மாதரம் பாடலின் முக்கிய அர்த்தம் தாய் மண்ணே உன்னை வணங்குகிறேன் என்பதேயாகும்.
சுதந்திர போராட்டத்தின்போது நமது வீரர்களின் நாடி நரம்பெல்லாம் ஊடுருவி சுதந்திர தீயை பற்ற வைத்து, கொளுந்துவிட்டு எரிய செய்த மந்திர சொல் வந்தே மாதரம். போராட்ட களத்தில் அனைவரையும் வீறுகொண்டு எழ வைத்ததும் இந்த அரிச்சுவடிதான். இந்த பாடலை கவிஞரான பக்கிம் சாட்டர்ஜி 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி எழுதினார். அதற்கு முதலில் ஜாதுநாத் பட்டாச்சார்யாவும், பின்னர் வங்கத்து கவிஞரான ரவீந்திரநாத் தாகூரும் இசை அமைத்தனர். சுதந்திர வேட்கையை உணர்ச்சி பெருக்கெடுக்க வைத்த வந்தே மாதரம் பாடலுக்கு இப்போது 150 வயது ஆகிறது. சுதந்திர போராட்டத்தின்போது, அடிமை சங்கிலியை உடைத்தெறிந்து நாட்டுக்கு விடுதலை பெற்று தந்தாகவேண்டும் என்ற ஆக்ரோஷத்தோடு ஆங்கிலேயரை எதிர்த்து எப்படி போராட வைத்ததோ, அதே உத்வேகத்தோடு இப்போதும் ஒவ்வொருவரின் செவிகளில் ரீங்காரமிட்டு தேசப்பற்றை வளர்த்தெடுத்து வருகிறது.
இந்த பாடலின் முக்கிய அர்த்தம் தாய் மண்ணே உன்னை வணங்குகிறேன் என்பதேயாகும். அதாவது நம் நாடு தாயாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த காலக்கட்டங்களில் சுதந்திர போராட்டம் ஒன்றைதான் தங்களின் உயிர் மூச்சாக ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சி களத்தில் இறங்கியது.
கொல்கத்தாவில் 1896-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் 12-வது மாநாடு நடந்த நேரத்தில் ஆரம்ப நிகழ்ச்சியாக வந்தே மாதரம் பாடல், ரவீந்திரநாத் தாகூரின் முயற்சியால் பாடப்பட்டது. இந்த பாடலை கேட்டவுடன், அங்கு திரண்டிருந்த மக்கள் ஒருமித்த குரலில் வானம் இடிந்து விழும் அளவுக்கு சுதந்திர வெறியுடன் பாடினர்.
வந்தே மாதரம் பாடல் மீது மிகுந்த பற்றுக்கொண்ட மகாகவி பாரதியார் இந்த பாடலை இரு வடிவங்களில் தமிழாக்கம் செய்திருக்கிறார். அதில் முதல் வரி தொடக்க சொற்றொடர் வந்தே மாதரம்தான்.
கருப்பு-வெள்ளை காலத்தில் மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவு ஆட்சி செய்யும் இன்றைய காலத்திலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தாய் மண்ணே வணக்கம் பாடலில் வரும் வந்தே மாதரம் என்ற வார்த்தை இளைஞர்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது. அதுபோல, முந்தைய தலைமுறைக்கு வந்தே மாதரம் என்ற வார்த்தையை கொண்டு சேர்த்த பெருமை அகில இந்திய வானொலியையே சேரும். அப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் ரேடியோவில் வந்தே மாதரம்-சுஜலாம் சுபலாம் என்ற பாடலில் இருந்துதான் ஒலிப்பரப்பே தொடங்கும். வந்தே மாதரம் பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போதும், அதில் அணிவகுத்து வரும் வரிகளை தன்னை அறியாமலேயே முணுமுணுக்க வைக்கும் வகையில் இனிமையாகவும், ரம்மியமாகவும் இசையமைக்கப்பட்டு இருந்தது.
வ.உ.சிதம்பரனார் தன் கப்பலில் எழுதியதும், கொடி காத்த திருப்பூர் குமரன் தேசிய கொடியேந்திக்கொண்டே தன் இறுதி மூச்சாக ஒலித்த வார்த்தையும் வந்தே மாதரம் என்ற பொன் வரிகள்தான். இப்படிப்பட்ட வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதையொட்டி மக்களவையில் நடந்த சிறப்பு விவாதத்தில், அந்த பாடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டிய நேரத்தில் இந்த பாடலை தமிழில் மொழி பெயர்த்த பாரதியாரின் மேன்மையைப்பற்றி மட்டும் கூறி முடித்துவிடாமல், பாரதியாரின் சிந்தனையில் உதித்த தாயின் மணிக்கொடி பாரீர் பாடலையும் பாடி பாரதியாருக்கும் பெருமை சேர்த்தார். வந்தே மாதரம் பாடல் எந்தவித சர்ச்சைக்கும் இடம் இல்லாமல் சுதந்திர தாகத்தை தணித்தது. வந்தே மாதரம் என்ற ஆற்றல்மிகுந்த வார்த்தை நம் உணர்வோடு எப்போதும் கலந்திருக்கும்.






