ஏவுகணைகளை நொறுக்கி தள்ளிய சுதர்சன சக்கரம்


ஏவுகணைகளை நொறுக்கி தள்ளிய சுதர்சன சக்கரம்
x

எஸ்-400’ வான்வெளி கவசத்துக்கு ‘சுதர்சன சக்கரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு எதிராக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடங்கியது. கடந்த 7-ந் தேதி நள்ளிரவு தொடங்கிய இந்த தாக்குதலில் 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் சுக்கு நூறாக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்களையோ, பாகிஸ்தான் ராணுவ முகாம்களையோ இந்தியா குறிவைக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் இந்த சம்பவத்துக்கு பின் இந்திய எல்லை கிராமங்களில் உள்ள அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 8-ந் தேதி இரவில் ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகார் உள்பட பல நகரங்களை பாகிஸ்தான் குறிவைத்தது. இந்த நகரங்கள் மீது இலக்கு வைத்து சீனாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்க திட்டமிட்டது. இந்தியாவில் உள்ள குருத்வாராக்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களையும் பாகிஸ்தான் குறிவைத்தது என்று வௌியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார். இதுபோல பாகிஸ்தான் ஏவிய டிரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை. ஆனால் இந்திய ராணுவம் மிக சமயோசிதமாக நம்மிடம் இருக்கும் ரஷியாவில் தயாரிக்கப்பட்ட 'எஸ்-400' என்ற வான்வெளி கவசத்தை பயன்படுத்தி அந்த ஏவுகணைகள், டிரோன்களை தூள் தூளாக்கியது.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் 300 முதல் 400 வரையிலான பாகிஸ்தான் டிரோன்கள் 36 ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவப்பட்டது. ஆனால் அவற்றையெல்லாம் இந்திய ராணுவம் நொறுக்கி தள்ளிவிட்டது. ரஜோரி நகரத்தின் மீது பாகிஸ்தான் ஏவிய ஏவுகணை தாக்குதலில் ஒரு உயரதிகாரி அவரது வீட்டில் உயிரிழந்தார். நம்மிடம் 'இந்த எஸ்-400' என்ற வான்வெளி பாதுகாப்பு அமைப்பு இப்போது 3 இருக்கிறது. இதன் விலை ரூ.40 ஆயிரம் கோடியாகும். இந்த 'எஸ்-400' வான்வெளி கவசத்துக்கு 'சுதர்சன சக்கரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்து புராணங்களில் பகவான் கிருஷ்ணரின் கையில் இருப்பதுதான் சுதர்சன சக்கரம். இது எல்லா ஆயுதங்களைக்காட்டிலும் வல்லமையானது. எப்போதும் சுழன்றுக்கொண்டே இருந்து எதிரிகளை துவம்சம் செய்துவிடும். அதுபோல நம்மிடம் இருக்கும் 'எஸ்-400' வான்வெளி கவசம் 600 கிலோ மீட்டர் தூரத்தில் வந்துக்கொண்டிருக்கும் ஏவுகணைகளை கண்டறிந்து 400 கிலோ மீட்டர் தூரத்தை நெருங்கிய உடன் வானிலேயே தாக்கி அழித்துவிடும் வல்லமை படைத்தது.

இதுபோல இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட 'பராக்', 'ஹரூப்' என்ற டிரோன்கள் எதிரி நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமல்லாமல் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளையும் அழித்தது. இதோடு நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஆகாஷ்' என்ற நேருக்கு நேர் மோதி அழிக்கும் ஏவுகணைகளும் பாகிஸ்தானின் ஏவுகணைகளை அழித்தன. பாகிஸ்தான் விமானப்படையை சேர்ந்த பல விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆக இந்திய ராணுவத்தினரின் வீரத்தோடு இணைந்து இந்த கருவிகள் எல்லாம் எதிரிகளின் தாக்குதலை சின்னா பின்னமாக்கியது. 4 நாட்களாக இந்திய ராணுவத்தின் தாக்குதலால் பாகிஸ்தானின் ராணுவ உள்கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் வீரம் எவருக்கும் சளைத்தது அல்ல என்பதை உலகுக்கு இது பறைசாற்றிவிட்டது.

1 More update

Next Story