நேபாளத்தை புரட்டிப்போட்ட இளைஞர் படை


நேபாளத்தை புரட்டிப்போட்ட இளைஞர் படை
x

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே ராணுவம், பிரதமர் சர்மாஒலியை ராஜினாமா செய்யச்சொல்லியது.

இந்தியாவின் அண்டைநாடு நேபாளம். இருநாடுகளுக்கும் இடையே 1,751 கி.மீ. தூரம் எல்லைக்கோடு இருக்கிறது. இந்தியாவில் உள்ள சிக்கிம், மேற்குவங்காளம், பீகார், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களின் எல்லையில் நேபாளம் இருக்கிறது. இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகை 2.96 கோடியாகும். 2001-ம் ஆண்டு வரை இங்கு மன்னர் ஆட்சி இருந்து வந்தது. அந்த ஆண்டில் மன்னர் பிரேந்திரா கொல்லப்பட்டபிறகு மன்னராட்சி முடிவுக்குவந்து ஜனாதிபதியின் நிர்வாகம் வந்தது. இந்த நாட்டின் பிரதமராக சர்மாஒலி 3 முறை இருந்தார். ஆனால் கடந்த 8-ந்தேதி அங்கு இளைஞர்படை கொதித்தெழுந்து நடத்திய போராட்டத்தால் அவர் ராஜினாமா செய்து ஓடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதற்கு 26 சமூகவலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒருகாரணமாக சொல்லப்பட்டாலும், அதுவே முழுமையான காரணமல்ல. அந்த நாட்டில் தலைவிரித்தாடும் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்சஊழல், அதிகார துஷ்பிரயோகம், தாங்கமுடியாத விலைவாசி உயர்வு, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, அதிகாரத்தில் உள்ளவர்களின் பிள்ளைகளுடைய ஆடம்பர வாழ்க்கை என்பதெல்லாம் 1996 முதல் 2010 வரை பிறந்த தலைமுறையான ‘ஜென் இசட்’ என்று சொல்லப்படும் இளைஞர் பட்டாளத்தின் மனதில் நீருபூத்த நெருப்பாக கொதித்துக்கொண்டிருந்தது.

எப்போது இந்த கனல் பற்றி எரியத்தொடங்குமோ? என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சூழ்நிலையில், கடந்த 6-ந்தேதி கோஷிமாகாண மந்திரி ராம்பகதூர்மகர் சென்ற ஜீப், லலித்பூரில் 11 வயது பள்ளி மாணவி மீது மோதிவிட்டு கொஞ்சம்கூட கண்டுகொள்ளாமல் அங்கு இருந்து சென்றுவிட்டது. இந்த செயலால் காயமடைந்த மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கீழேவிழுந்த மாணவியை மோதித்தள்ளிய மந்திரியும் கண்டுகொள்ளவில்லை. இந்த கொடுஞ்செயலை சாதாரண விபத்துதான் என்று பிரதமர் சர்மாஒலி சொல்லியது காட்டுத்தீப்போல அனைத்து கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மட்டுமல்லாமல், சாதாரண டீக்கடைகளில்கூட ஆத்திரத்துடன் அனைவரையும் பேசவைத்தது.

அவ்வளவுதான் 8-ந்தேதி ‘ஜென் இசட்’ இளைஞர் பட்டாளம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களுமே தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது மந்திரிகளின் வீடுகள் சூறையாடப்பட்டதோடு, மந்திரிகளையும் ஓடஓட விரட்டி துரத்தியடித்தது போன்ற காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த வன்முறை சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்தனர். 1,700-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். போராட்டக்காரர்களின் ஒரேகோரிக்கை பிரதமரும், மந்திரிகளும் ராஜினாமா செய்யவேண்டும் என்பதுதான். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே ராணுவம், பிரதமர் சர்மாஒலியை ராஜினாமா செய்யச்சொல்லியது. அவரும் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ராஜினாமா செய்துவிட்டார்.

புதிய பிரதமராக ஒருவரை ஜனாதிபதி நியமிக்க 4 பேர் பட்டியல் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் ‘ஜென் இசட்’ படை பல நல்ல தீர்ப்புகளை வழங்கிய ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும், நேர்மையின் சின்னம் என அழைக்கப்பட்டவருமான சுசீலா கார்கியைத்தான் பிரதமராக நியமிக்கவேண்டும் என்று வலியுறுத்தவே அவரே இப்போது பதவியேற்றுள்ளார். சுசீலா கார்கி, நேபாள நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியும், முதல் பெண் பிரதமரும் ஆவார். தற்போது நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளது. அடுத்த மார்ச் மாதம் புதிதாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இருந்த சர்மாஒலி இந்தியாவுடன் அவ்வளவு நல்லஉறவு கொண்டவர் அல்ல. சீனாவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். ஆனால் இப்போது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுசீலா கார்கியின் ஆட்சியில், இந்தியாவுடன் நல்லுறவை நேபாளம் கொண்டிருக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. மொத்தத்தில் வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்சஊழல், அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி சொகுசு வாழ்க்கை, விலைவாசி உயர்வு போன்ற சமூகபிரச்சினைகளை இன்றைய இளைஞர் சமுதாயம் தாங்கிக்கொள்ளாது, அவைகளை பார்த்து பொறுத்துக்கொள்ளாது என்பது நேபாளத்தில் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

1 More update

Next Story