மின்சார வாகனங்கள் இருக்கின்றன; சார்ஜிங் நிலையங்கள்தான் இல்லை!

இந்தியாவில் சராசரியாக 65 மின்சார வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையம் தான் இருக்கிறது.
இந்தியாவில் கச்சா எண்ணெய் பயன்பாட்டின் மொத்த தேவையில் 85 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. மிக அதிகமான தொகை இதற்கு செலவிடப்படுவதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. இப்போது ரஷியா குறைந்த விலைக்கு தரும் கச்சா எண்ணெயை வாங்குவதுதான், அமெரிக்கா அதிக அளவு வரியை இந்திய பொருட்கள் மீது விதிக்க காரணமாக இருக்கிறது. ஆக இந்திய பொருளாதாரமே பெட்ரோல்-டீசலை சுற்றி சுழன்றுக்கொண்டிருக்கும் நிலையில் இதற்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. தமிழக அரசும் இந்த முனைப்பில் கைகோர்த்துக்கொண்டு இருக்கிறது.
மத்திய அரசின் ‘வாகன்’ தகவலின்படி, இந்தியா முழுவதும் இப்போது மின்சாரத்தில் இயங்கும் 15 லட்சத்து 81 ஆயிரம் கார்களும், 54 லட்சத்து 81 ஆயிரம் இருசக்கர வாகனங்களும் இருக்கின்றன. அதில் தமிழகத்தில் மட்டும் 3 லட்சத்து 30 ஆயிரத்து 716 இருசக்கர வாகனங்களும், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 564 கார்களும் இருக்கின்றன. பெட்ரோல்-டீசலைவிட மின்சார வாகனங்களுக்கு ஆகும் செலவு மிகவும் குறைவு என்பதால் புதிதாக கார் வாங்குபவர்கள் விலை சற்று அதிகமாக இருந்தாலும் மின்சார வாகனங்களையே நாடுகிறார்கள். ஆக மின்சார வாகனங்களுக்கு குறைவில்லை. ஆனால் அதில் உள்ள பேட்டரிகளுக்கு சார்ஜ் செய்யும் நிலையங்களின் பற்றாக்குறைதான் பெரும் இடர்பாடாக இருக்கிறது. சீனாவை எடுத்துக்கொண்டால் 3 முதல் 6 மின்சார வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையமும், நெதர்லாந்தில் 2 முதல் 7 வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையமும் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் சராசரியாக 65 மின்சார வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையம் தான் இருக்கிறது.
இந்தியாவில் தற்போது உள்ள 25,202 சார்ஜிங் நிலையங்களில், தமிழகத்தில் 1,413-ம், கர்நாடகாவில் 5,765-ம் இருக்கிறது. தமிழ்நாட்டில் சராசரியாக 86 மின்சார வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையம்தான் இருக்கிறது. அதிலும் சிறிய நகரங்கள், கிராமப்புறங்கள், மலைப்பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் இல்லாததால் மின்சார வாகனங்களில் அங்கெல்லாம் செல்லமுடியாத நிலை இருக்கிறது. வழியில் இருக்கும் பல சார்ஜிங் நிலையங்கள் செயல்படாமல் இருப்பதால் பல வாகனங்கள் பாதி வழியிலேயே நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டு, சிரமங்களுக்கு காரணமாக இருக்கிறது. தற்போது ஒரு முறை சார்ஜ் செய்தால் குறைந்தபட்சமாக 230 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் கார்களில் இருந்து பேட்டரி திறனை பொறுத்து அதிகபட்சமாக மெர்சிடஸ் பென்ஸ் இகியூஎஸ்-580 என்ற மாடல் கார் அதிகபட்சமாக 857 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.
நடுத்தர மக்கள் குறைந்த விலையில் வாங்கும் வகையிலான கார்களை உற்பத்தி செய்யும் மாருதி கார் நிறுவனம் இன்னும் மின்சார வாகன உற்பத்தியில் இறங்கவில்லை. அந்த நிறுவனம் நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் போதுமான அளவு நிறுவப்பட்ட பிறகு மார்க்கெட்டுக்குள் இறங்கலாம் என்று காத்திருப்பதாக கூறப்படுகிறது. பச்சை போர்டு போட்டுக்கொண்டு வரும் மின்சார வாகனங்களின் பயன்பாடு முழுமையாக இருக்க வேண்டும் என்றால் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதில் தன்னிறைவு பெற வேண்டும். அதற்கு மத்திய-மாநில அரசுகளும், பெரிய நிறுவனங்களும் முழுவீச்சில் இறங்க வேண்டும். மேலும் சார்ஜிங் நிலையங்களில் இப்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை இன்னும் சற்று குறைக்க வேண்டும். அரசாங்கம் மின்சார சார்ஜர்கள் இருக்கும் இடத்தை அடையாளம் காண்பதற்காக தமிழ்நாடு பசுமை எரிசக்தி நிறுவனம் டிஜிட்டல் மேப் வசதியை ஏற்படுத்தி வருகிறது. 6 முதல் 30 வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையங்கள் இருக்க வேண்டும் என்பது இலக்காக இருக்கிறது.






