திருப்பதி: தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி

ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதன்பிறகு ஸ்ரீவாரி புஷ்கரணியில் மிதந்த தெப்பத்தேரில் உற்சவர்கள் எழுந்தருளி இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை 3 சுற்றுகள் பவனி வந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். புஷ்கரணியின் கரைகளில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தெப்போற்சவத்தில் திருமலை பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தெப்போற்சவத்தின் 4-வது நாளான இன்று (புதன்கிழமை) இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி 5 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
அதேபோல் தெப்போற்சவத்தின் 5-வது நாளான நாளை (வியாழக்கிழமை) உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இதோடு வருடாந்திர தெப்போற்சவம் நிறைவடைகிறது.