கோரப்படாத வங்கி பணம் இனி வாரிசுகளுக்கு கிடைக்கும் !

வங்கி கணக்கு டெபாசிட்டுகளுக்கும், லாக்கர்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அதாவது 4 நாமினிகள் வரை நியமிக்கமுடியும்.
சிறிய அளவிலான சேமிப்பு கூட காலப்போக்கில் மலை போல உதவும். இதற்காக வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை பலரும் தங்களுடைய எதிர்கால தேவைகளுக்காக சேமித்து வருகின்றனர். சேமிப்பு பழக்கத்தை பொதுமக்களிடம் புகட்டுவதற்கு வரப்பிரசாதமாக வந்ததுதான் வங்கிகள். வங்கியில் கணக்குகளை தொடங்கினால் பணத்தை சேமித்து வைக்கவும் முடியும், அவசர தேவைக்கு எளிதாக எடுத்துக்கொள்ளவும் முடியும். ஏ.டி.எம். கார்டு பயன்பாடு வந்த பிறகு வங்கிக்கு போய்தான் பணம் எடுக்கவேண்டும் என்ற நிலை மாறியது. கணக்கு இருக்கும் தங்கள் வங்கி ஏ.டி.எம். எந்திரம் மட்டுமின்றி, ஆங்காங்கு இருக்கும் பிற வங்கிகளுடைய ஏ.டி.எம்.களிலும் பணத்தை எடுத்துக்கொள்ளமுடியும். வெளியூர்களுக்கு சென்றால்கூட கைநிறைய பணம் எடுத்துக்கொண்டு செல்லவேண்டிய தேவையே இல்லை. இதையும் தாண்டி ஸ்மார்ட் போன்களின் வசதியோடு யு.பி.ஐ. மூலம் பணப்பரிமாற்றம் செய்வது இப்போது எளிதாகிவிட்டது.
இதனால் வங்கி கணக்கு இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் இப்படி வங்கி சேவையை பயன்படுத்துபவர்களின் பணம், அவர்கள் எதிர்பாராமல் இறந்துவிட்டாலோ அல்லது வங்கி கணக்கு புத்தகத்தை தொலைத்துவிட்டாலோ அல்லது வேறு சில காரணங்களாலோ அது கோரப்படாமல் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஒருவருடைய வங்கி கணக்கில் அது சேமிப்பு கணக்காக இருந்தாலும், நடப்பு கணக்காக இருந்தாலும் அதில் 10 ஆண்டுகள் பரிமாற்றம் இல்லாமல் இருந்தாலும், அதுபோல டெபாசிட்டுகள் முதிர்ச்சி அடைந்து 10 ஆண்டுகள் கோரப்படாமல் இருந்தாலும் அந்த கணக்குகள் செயல்படாத கணக்குகளாக மாறிவிடும். மேலும் அந்த கணக்கில் உள்ள தொகை வங்கிகளில் இருந்து ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டுதாரர்களின் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் சேர்க்கப்பட்டுவிடும்.
வங்கிகளில் உள்ள லாக்கர் வசதியை பயன்படுத்துபவர்களுக்கும் இதே நடைமுறை இருக்கிறது. இவ்வளவுக்கும் வங்கி கணக்கை தொடங்கும்போது ஒரு நாமினி அதாவது வாரிசுதாரர் பெயரை குறிப்பிடவேண்டும். இதுபோன்ற நிலையில் பல நேரங்களில் வாரிசுதாரரை கண்டுபிடிக்கமுடியாத நிலையும், அவர்களே வந்து கோரமுடியாத நிலையும் இருக்கிறது. தற்போது கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி கணக்குப்படி பொதுத்துறை வங்கிகளில் இதுபோல கோரப்படாத தொகையாக ரூ.58 ஆயிரத்து 330 கோடியே 26 லட்சமும், தனியார் வங்கிகளில் ரூ.8 ஆயிரத்து 673 கோடியே 72 லட்சமும் இருக்கிறது. வங்கி கணக்கு பராமரிப்பவர்கள் ஒரு வாரிசுதாரரை மட்டுமே நியமிக்கமுடியும் என்பதால், அந்த வாரிசுதாரரும் கோராதபட்சத்தில் கணக்கில் இருப்பு உள்ள பணம் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்துக்கு போய் சேராத நிலை இருக்கிறது.
இதை தவிர்க்க நிதி அமைச்சகம் வங்கி சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. அதன்படி, இன்று முதல் வங்கி கணக்கு டெபாசிட்டுகளுக்கும், லாக்கர்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அதாவது 4 நாமினிகள் வரை நியமிக்கமுடியும். இதில் வரிசையாக முதல் வாரிசுதாரர் முதலில் கோரமுடியும், அவர் இல்லையென்றால் இரண்டாவது வாரிசுதாரரும், அவரும் கோரவில்லையென்றால் அடுத்த வாரிசுதாரர்களும் உரிமை கோரமுடியும்.
இதுமட்டுமல்லாமல் வங்கி கணக்குக்கு, ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நாமினிகளாக நியமிக்கும்பட்சத்தில் அவர் விரும்பினால், அவர்கள் அனைவரும் பணத்தை பங்கிட்டுக்கொள்ளவும் எழுதிக்கொடுக்கமுடியும். இவ்வாறு நாமினியாக நியமிக்கப்படும்போது மைனர்கள் பெயரையும் குறிப்பிடமுடியும். நிதி அமைச்சகம் கொண்டுவந்துள்ள இந்த விதிகள் வரவேற்புக்குரியது. இனி கோரப்படாத பணம் என்பதே இருக்காது. வங்கி கணக்கு மட்டுமல்லாமல் எல்.ஐ.சி., பங்குகள், மியூச்சுவல் பண்டு போன்றவற்றிலும் கோரப்படாத நிதியை பெறுவதற்காக இதுபோல ஒன்றுக்கு மேலான வாரிசுதாரர்களை நியமிக்கும் வகையில் விதிகளை திருத்தவேண்டும்.






