அமெரிக்க பயணத்தில் பிரதமர் சாதித்தது என்ன?

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அமெரிக்காவை மீண்டும் தலைசிறந்த நாடாக ஆக்குவோம் என்று பிரகடனப்படுத்தி, இந்த இலக்கை நோக்கியே காய்களை நகர்த்தி வருகிறார். அமெரிக்காவின் வருவாயை பெருக்கும் வகையில் மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதமும் வரி விதித்தார். பின்னர் அவர் மெக்சிகோ, கனடா நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியை ஒரு மாதம் தள்ளிப்போட்டு இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் இரும்பு (ஸ்டீல்), அலுமினியத்துக்கு 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.
இந்த நிலையில், அவர் பதவிக்கு வந்து ஒரு மாதம் முடிவதற்குள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். மோடியும், டிரம்பும் நல்ல நண்பர்கள் என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னதான் நல்ல நண்பர் என்றாலும் இருவருமே அவரவர் நாட்டின் நலனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதும் இந்த பயணத்தின்போது நடந்த பேச்சுவார்த்தை தெளிவாக்கிவிட்டது. இந்த சந்திப்புக்கு 3 மணி நேரத்துக்கு முன்பாக டிரம்ப் வரிவிதிப்பில் நாங்கள் பதிலுக்கு, பதில் நடவடிக்கையை எடுப்போம். அமெரிக்க பொருட்களுக்கு அவர்கள் நாட்டில் என்ன வரி விதிக்கிறார்களோ? அதே வரியை நாங்களும் விதிப்போம் என்ற தன் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்தார்.
பின்னர் பேச்சுவார்த்தையிலும் அவரது கருத்து, அமெரிக்கா-இந்தியா வர்த்தகத்தின் பற்றாக்குறையை சரிசெய்யும் வகையிலேயே இருந்தது. அமெரிக்காவிற்கு இந்தியா மேற்கொள்ளும் ஏற்றுமதியைவிட, அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் அளவு குறைவாகவே இருக்கிறது. இந்த வர்த்தக பற்றாக்குறை ரூ.3.9 லட்சம் கோடியாகும். இந்த இடைவெளியை குறைக்கவேண்டும் என்பதுதான் டிரம்பின் நிலைப்பாடு. இதுமட்டுமல்லாமல் இரு நாடுகளின் பரஸ்பர வர்த்தகம் இப்போது இருக்கும் ரூ.21.5 லட்சம் கோடியை 2030-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க, அதாவது ரூ.43 லட்சம் கோடியாக உயர்த்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இந்த இலக்கை அடைவதற்காக இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்கவும், அதுபோல இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை அமெரிக்காவிற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துகொண்டிருந்தபோதே, நான் குறை சொல்லவில்லை என்ற வார்த்தையை போட்டுவிட்டு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. இது நியாயமற்றது என்று இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, டிரம்ப் போட்டு உடைத்துவிட்டார். மொத்தத்தில் இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்கு 2 லாபம் கிடைத்து இருக்கிறது. ஒன்று மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கிறேன் என்று உறுதி அளித்தது. இரண்டாவதாக இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்காமல் இருப்பது. அதோடு இருநாடுகளின் உறவும், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. இதுதான் மோடியின் அமெரிக்க பயணத்தின் வெற்றியாகும்.
ஆனால் பிரதமர் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய உடன் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா வழங்கிய நிதி உதவி ரூ.180 கோடியை நிறுத்த உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. டிரம்பை சந்தித்துவிட்டு இந்திய மண்ணில் மோடி காலெடுத்து வைத்த உடன் இந்த உத்தரவு வேண்டுமா? என்பதுதான் எல்லோருடைய கேள்வியாக இருக்கிறது.






