என் கேள்விக்கென்ன பதில்?

சிந்தூர் ஆபரேஷனில் என்ன நடந்தது? ஏன் தாக்குதலை இந்தியா நிறுத்தியது? என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கேள்வியாக இருக்கிறது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்து கடந்தாண்டு 18-வது மக்களவை தொடங்கியதில் இருந்து இதுவரை நடந்த நான்கு கூட்டத்தொடர்களும் அமளியிலேயே நடந்தன. கடந்த 17-வது மக்களவையிலும் மொத்தம் நடந்த 15 கூட்டத்தொடர்களில் 11 கூட்டத்தொடர்கள் அமளி காரணமாக முழுமையாக நடைபெறாமல் முன்கூட்டியே முடிக்கப்பட்டன. இந்த கூட்டத்தொடரில் நாட்டு மக்கள் மனதிலும், எதிர்க்கட்சிகளிடமும் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. தமிழகத்திற்கும் நிறைய கோரிக்கைகள் இருக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நான் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையால் தான் அணுசக்தி வைத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மேற்கொண்டு போரை நடத்தாமல் நிறுத்தி வைத்தனர் என்றார். மேலும் அவர் இந்த போரை நிறுத்தியதற்காக தனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார். அதனை பாகிஸ்தானும் ஆமோதித்து இருக்கிறது. ஆக சிந்தூர் ஆபரேஷனில் என்ன நடந்தது? ஏன் தாக்குதலை இந்தியா நிறுத்தியது? என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கேள்வியாக இருக்கிறது.
ஆனால் நாடாளுமன்றம் கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த குளிர்கால கூட்டத் தொடர் என்பது ஆபரேஷன் சிந்தூரில் சாதித்த இந்திய வீரர்களின் வெற்றியை கொண்டாடுவது தான் என்று கூறினார். ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியாவின் விமான விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உள்பட மொத்தம் 279 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான காரணங்கள் இன்னும் சரியாக வெளியே வரவில்லை. ஆனால் அமெரிக்காவின் புகழ்பெற்ற வால் ஸ்டிரீட் பத்திரிகையும், ராய்ட்டர் செய்தி ஏஜென்சியும் விமானத்தில் இருந்த இருவிமானிகளின் பேச்சையும் குறிப்பிட்டு என்ஜினுக்கு எரிபொருள் செல்லும் குழாயை ஒரு விமானி அடைத்ததால் தான் இந்த கோர விபத்து நடந்தது என்று வெளியிட்ட செய்தி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது? என்று நாடும், ஆண்டுக்கு விமான பயணம் மேற்கொள்ளும் 35 கோடிக்கும் மேற்பட்ட இந்திய பயணிகளும் கேட்கும் முக்கிய கேள்வியாக இருக்கிறது.
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் பீகாரில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றியும், அதன் உள் நோக்கம் பற்றியும் தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்களுக்கும் அதனை நடைமுறைப்படுத்த இது முன்னோடியா? என்பதும் மக்கள் மனதில் இருக்கும் முக்கிய கேள்வியாகும். விலைவாசி உயர்வு தொடர்பாக ஒவ்வொரு ஆய்வும் ஒவ்வொரு குறியீட்டை கூறுகிறது. எது உண்மையான நிலவரம்? என்பதும் எல்லோரும் எதிர்பார்க்கும் முக்கியமான தகவலாகும். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமா? என்பது பெரிய எதிர்பார்ப்பாகும்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி பிரதமர் நரேந்திர மோடி அவையில் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை செயலிழக்கும் வகையில் பிரதமர் இந்த பிரச்சினையை மடை மாற்றிவிட்டு இந்த கூட்டத்தொடர் வெற்றி கொண்டாட்டம் என்று கூறிவிட்டார். நேற்று முதல் நாளிலேயே அவை ஒத்தி வைக்கப்பட்டது. முதலில் பகல் 12 மணி என்றார்கள், பிறகு இருமுறை ஒத்தி வைக்கப்பட்டு இறுதியாக நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. ஆக அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்க வேண்டும் என்றாலும், மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதற்கும் கூட்டம் சுமூகமாக நடந்தால் தான் முடியும். அது நிறைவேற வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாகும்.






