15 நாட்களே நடக்கப்போகும் குளிர்கால கூட்டத்தொடர்

கடந்தாண்டு 19 நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டு, 20 நாட்கள் நடந்தது.
மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்வுகாண பயன்தரும் வகையில் இருப்பது நாடாளுமன்ற கூட்டம்தான். மாநில பிரச்சினைகளையும், அந்த மாநில எம்.பி.க்கள் தங்கள் உரையின்போது எடுத்துரைத்து அதற்குரிய பதிலை அரசு தரப்பில் இருந்து பெறுவதற்கு உதவியாக இருப்பதும் இந்த கூட்டத்தொடர் தான். இந்தாண்டு குளிர்கால கூட்டத்தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில் அவர், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளதால், இந்த கூட்டம் டிசம்பர் 1-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெறும்.
இந்த கூட்டத்தொடர் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையிலும், மக்களுக்கு சேவையாற்றும் வகையிலும் இருக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் யதார்த்தத்தில் இப்படி அமையுமா? என்பது சந்தேகத்துக்குரியது. 2014-ம் ஆண்டில் இருந்து கணக்கிட்டால் இந்தாண்டு தான் மிக குறைந்த நாட்கள் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கிறது. 2014-ம் ஆண்டில் 22 நாட்கள் நடந்திருக்கிறது. கடந்தாண்டு 19 நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டு, 20 நாட்கள் நடந்தது. இப்போதும் 19 நாட்கள் என்று சொல்லப்பட்டாலும், அலுவல் நாட்கள் வெறும் 15 தான். எத்தனை நாட்கள் மக்கள் பிரச்சினைக்காக நாடாளுமன்றம் இயங்கும் என்று தெரியவில்லை?.
நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய உடனேயே எதிர்க்கட்சிகள் பல பிரச்சினைகளை எழுப்பி, அதனை அவை ஏற்றுக்கொண்டு உடனடியாக விவாதிக்கவேண்டும் என்று கோருகிறார்கள். ஆனால் அதனை அரசு தரப்பிலோ, சபாநாயகரோ ஏற்றுக்கொள்வதில்லை. எனவே அவையில் அமளியும், கூச்சலும், குழப்பமுமாக இருக்கும். அவை நடத்தமுடியாமல் ஒத்தி வைக்கப்படும். இது நாள்தோறும் நடக்கும் வழக்கமான நடைமுறையாகிவிடும். திட்டமிட்டிருந்த எந்த அலுவலும் நடக்காமல் போய்விடும். இந்த குளிர்கால தொடரிலும் அமளிக்கும், கூச்சலுக்கும் பஞ்சமே இல்லாத அளவுக்கு விவகாரங்கள் இருக்கின்றன. பீகார் தேர்தல் முடிவுகள் 14-ந்தேதி வெளிவந்து புதிய அரசு அமைந்துள்ளது. ஆகவே அந்த தேர்தல் முடிவுகளும் இந்த கூட்டத்தொடரில் எதிரொலிக்கும். இதுமட்டுமல்லாமல் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி எதிர்க்கட்சிகளால் பெரிதும் எதிர்க்கப்படும் நிலையில் அந்த பிரச்சினையும் சபையில் கிளப்பப்படும்.
இதனை எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்கள் எதிர்த்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த பிரச்சினைகளும் குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்பப்படும். காங்கிரசை பொறுத்தமட்டில் வாக்குதிருட்டு என்பதனை பெரிதும் கிளப்ப இருக்கிறார்கள். மேற்கு வங்காளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மத்திய அரசு தரவேண்டிய நிலுவை தொகை வழங்காமல் இருப்பதும் இந்த கூட்டத்தொடரில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் எழுப்பப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல பிரச்சினைகளும் புயலை கிளப்ப இருக்கின்றன. அதே நேரத்தில் 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசும் திட்டமிட்டு இருக்கிறது. ஆக இந்த கூட்டத்தொடரில் அனல் பற்றி எரியும். புயல் வீசும். அதனை எல்லாம் மத்திய அரசு அவையில் இருந்து சமாளிக்குமா? அல்லது வழக்கம்போல கூட்டம் ஒத்திவைக்கப்படுமா? என்பதுதான் மக்கள் முன்பு எழுந்திருக்கும் கேள்வியாகும்.






