உங்கள் பணம்; உங்கள் உரிமை!

மக்களுடைய பணம் மக்களுக்கே போய் சேரவேண்டும் என்ற நோக்கில் செயல்படும் நிர்மலா சீதாராமனின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் தனது அரசியல் வாழ்வின் ஆரம்ப கட்டங்களில், தான் மேற்கொண்டுவரும் கொள்கையை மாங்கொட்டையை எடுத்துக்காட்டாக கூறி விளக்குவார். என் கொள்கை மாங்கொட்டையை விதைப்பது போன்றது. அது நாம் உயிரோடு இருக்கும்போதே வளர்ந்து மரமாகி பழங்கள் பழுத்து தொங்கினால், நாம் அதை பறித்து சாப்பிட்டு அதன் ருசியை சுவைத்துக்கொள்ளமுடியும். ஒருவேளை நாம் இறக்க நேரிட்டால் நமது சந்ததி அந்த பழத்தை சுவைக்கமுடியும். ஆக நான் கையில் எடுத்துள்ள கொள்கை நமது காலத்திலேயே வெற்றி பெற்றால், நாமே அதன் பலனை அனுபவித்துக்கொள்ளமுடியும், இல்லையென்றாலும் நமது பிற்கால சந்ததிகள் அதை அனுபவிப்பார்கள் என்பார்.
அந்த காலங்களில் எல்.ஐ.சி. அதிகாரிகள் இதே கருத்தை கையில் எடுத்துக்கொண்டு இன்சூரன்சு குறித்து பிரசாரம் செய்வார்கள். இது மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போதும் மக்கள் இன்சூரன்சை குடும்ப பாதுகாப்புக்காக மட்டுமல்லாமல், சேமிப்புக்காகவும் பயன்படுத்துகிறார்கள். இதுபோல வங்கி சேமிப்பு, பிராவிடண்டு பண்டு, மியூச்சுவல் பண்டு, நிறுவனங்களின் பங்குகள் போன்ற பல முதலீடுகளில் சேமித்து வைத்து வருகிறார்கள். பல நேரங்களில் இத்தகைய சேமிப்புகள் கோரப்படாமல் அப்படியே கிடப்பில் இருந்துவிடுகின்றன. சிலர் இறந்துவிடும் சூழ்நிலையில் அதுதொடர்பாக வாரிசுகளிடம் விவரங்களை சொல்லாமலோ அல்லது அதுதொடர்பான விவரங்கள் அடங்கிய தஸ்தாவேஜூக்களை கொடுக்காமலோ இருந்துவிடுகிறார்கள்.
சிலர் இந்த பாலிசிகள் அல்லது சேமிப்பு கணக்கு புத்தகங்கள், பங்கு பத்திரங்கள் மற்றும் சேமிப்புகள் தொடர்பான கணக்கு விவரங்களை தொலைத்துவிடும் சூழ்நிலையில் எப்படி அந்த பணத்தை கோருவது? என்று தெரியாமல் நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என்ற விரக்தியில் அப்படியே விட்டுவிடுகிறார்கள். இன்னும் பலருக்கு இத்தகைய பணத்தை எப்படி கோருவது என்று தெரியாமல் அதைப்பற்றிய முயற்சிகளையே கைவிட்டுவிடுகிறார்கள். ஆக மக்களுக்கு சொந்தமான ரூ.1.84 லட்சம் கோடி கோரப்படாமல் அரசாங்கத்திடம் இருக்கிறது. இதில் கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கணக்குப்படி ரூ.75 ஆயிரம் கோடி ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்சூரன்சு நிறுவனங்களில் ரூ.14 ஆயிரம் கோடியும், மியூச்சுவல் பண்டில் ரூ.3 ஆயிரம் கோடியும், டிவிடெண்டு தொகையில் ரூ.9 ஆயிரம் கோடியும், ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள 172 கோடி பங்குகளும் யாராலும் கோரப்படாமல் இருக்கின்றன.
பெரும்பாலும் இந்த தொகையை பெறுவதற்கான வழிமுறைகள் மக்களுக்கு தெரிவதில்லை. மக்களுடைய பணம் மக்களுக்கே போய் சேரவேண்டும் என்ற நோக்கில் இப்போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “உங்கள் பணம்; உங்கள் உரிமை” என்ற பெயரில் பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். இதில் அவர், விழிப்புணர்வு, அணுகுமுறை மற்றும் நடவடிக்கை என்ற 3 முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளார். முதலாவதாக கோரப்படாமல் இருக்கும் பணம் குறித்து உரியவர்களிடம் வங்கிகளும், மற்ற நிறுவனங்களும் தெரிவித்து அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு உதவவேண்டும். அவர்களோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு உதவவேண்டும். அடுத்து அவர்களுடைய பணம் அவர்களுக்கு கிடைக்கும் வகையில் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும். நிர்மலா சீதாராமனின் இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால் இந்த திட்டம் சாதாரண பாமர மக்களுக்கும் புரியும் வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டால்தான் அரசின் நோக்கமும் நிறைவேறும். மக்களின் பணமும் மக்களுக்கே போய் சேரும்.






