சென்னை, மதுரை உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் சதம்

வறண்ட வானிலையே தொடர்ந்து இருப்பதால், சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கம் இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்கும்
சென்னை,
தமிழ்நாட்டில் கோடை காலம் இன்னும் முடியவில்லையோ என நினைக்கும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி இருந்தது. இதில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையம், தஞ்சாவூரில் தலா 102.2 டிகிரி (39 செல்சியஸ்) வெப்பம் பதிவானது.
அதனையடுத்து சென்னை மீனம்பாக்கம், நாகப்பட்டினம் தலா 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்), திருச்சி 101.3 டிகிரி(38.5 செல்சியஸ்), வேலூர் 100.58 டிகிரி(38.1 செல்சியஸ்), பாளையங்கோட்டை, கடலூர், மதுரை தலா 100.4 டிகிரி(38 செல்சியஸ்), சென்னை நுங்கம்பாக்கம் 100.04 டிகிரி(37.8 செல்சியஸ்) என மொத்தம் 10 இடங்களில் வெப்பம் சதம் அடித்தது. இதுதவிர, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தலா 100.04 டிகிரி(37.8 செல்சியஸ்) வெயில் பதிவாகியது.
வறண்ட வானிலையே தொடர்ந்து இருப்பதால், சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கம் இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்கும் எனவும், 13-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கான சூழல் இருக்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.