வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு


வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
x
தினத்தந்தி 13 Oct 2024 4:27 PM IST (Updated: 13 Oct 2024 6:34 PM IST)
t-max-icont-min-icon

இன்று முதல் சென்னையில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடையக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடலோரப்பகுதியை நோக்கி நகரும்.

5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

9 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டையில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை நிலவரம்

சென்னையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதன்படி சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

15-ம் தேதி சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன்படி திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூரில் 15-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் 15-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, மாவட்டகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ரெட் அலர்ட்

வரும் 16-ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 17-ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், தருமபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், "வடகிழக்கு பருவமழை காலக்கட்டம் அக்டோபர் என்பது நமக்கு தெரியும். ஆனால் அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை சீசனுக்கானது. சீசன் மழையை பொறுத்தவரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 95.3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தின் இயல்பு மழை என்பது 57.4 மில்லி மீட்டராகும். அப்படி பார்த்தால் தற்போது இயல்பை விட 66 சதவீதம் மழை அதிகம் பெய்துள்ளது.

அடிப்படையாக பார்த்தால் இப்போது அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்தம் உள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 15, 16 ஆகிய தேதிகளில் புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை அருகே வரக்கூடும். இதன் காரணமாக நமக்கு மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை இன்று முதல் மழை படிப்படியாக கூடி நாளை முதல் அதிகரிக்கும். அதன்பிறகு 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சென்னையில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் இயல்பு தேதி என்பது அக்டோபர் 20 தான். தற்போது அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் 2 நிகழ்வுகள் உள்ளன. இவை இரண்டும் ஒன்றொடொன்று இணைந்து இருக்கும் சூழலை நாம் பார்க்கிறோம். தென்மேற்கு பருவமழை இன்று பல இடங்களில் விலகி உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இன்னும் பல இடங்களில் தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக விலகும். அதன்பிறகு வடகிழக்கு பருவமழை என்பது தொடங்கும்.

இயல்பை விட அதிகமாக இருக்க கூடிய சூழலை பார்க்கிறோம். அதாவது அரபிக்கடல் - வங்கக்கடல் இணைந்து முழுமையாக இருக்கிறது. இது மழைக்கான காலக்கட்டம்" என்று அவர் கூறினார்.


Next Story