டிட்வா புயல் நாளை மாலைக்குப்பின் வலுவிழக்கும்; வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் டிட்வா புயல் உருவாகியுள்ளது.
டிட்வா புயல் நாளை மாலைக்குப்பின் வலுவிழக்கும்; வானிலை ஆய்வு மையம்
Published on

இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. புயல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும் வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 280 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து தெற்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்த புயல் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் - புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்.

டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகரும்போது வடதமிழகம் - புதுவை கடலோரப்பகுதிகளிலிருந்து இன்று நள்ளிரவில் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், நாளை அதிகாலை 50 கிலோ மீட்டர் தொலைவிலும் மாலை 25 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவக்கூடும்.

இந்நிலையில், டிட்வா புயல் நாளை மாலைக்குப்பின் வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா கூறுகையில், டிட்வா புயல் நாளை மாலைக்குப்பின் வலுவிழக்கக்கூடும். டிட்வா புயல் தமிழ்நாட்டில் கரையை கடக்க வாய்ப்பில்லை. புயலின் மையப்பகுதி கடலோரப்பகுதிகளில் நிலவும்.

சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டின் கடற்கரைக்கு 25 கிலோ மீட்டர் வரை டிட்வா புயல் நாளை மாலை நெருங்கி வரும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நாளை காற்றின் வேகம் 80 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும்

என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com