நீலகிரிக்கு நாளை, நாளை மறுநாள் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.