ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிப்பு


ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2025 3:00 AM IST (Updated: 20 Oct 2025 3:00 AM IST)
t-max-icont-min-icon

கத்தார் தலையீட்டால் இரு நாடுகளும் 48 மணி நேர போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.

தோஹா,

ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லை பகுதியில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதற்கு தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.ஆனால் ஆப்கானிஸ்தானின் தலீபான்கள் இதனை மறுத்து வருகின்றனர். இதற்கிடையே தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் பயங்கரவாத தளபதியை அழிப்பதாக கூறி பாகிஸ்தான் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இருதரப்பிலும் ராணுவ வீரர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதனையடுத்து கத்தார் தலையீட்டால் இரு நாடுகளும் 48 மணி நேர போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. ஆனால் அதனை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தில் வான்தாக்குதல் நடத்தியது. இதில் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஆப்கானிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாகவும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்தநிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளுக்கும் கத்தார் அழைப்பு விடுத்திருந்தது. அதனை ஏற்று இரு நாடுகளின் ராணுவ மந்திரிகளும் கத்தார் தலைநகர் தோஹா சென்றனர். அங்கு நடைபெற்ற சந்திப்பின்போது இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நீடித்த பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.

1 More update

Next Story