ஈரானில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்; அமெரிக்கா களத்தில் இறங்கும் - டிரம்ப் எச்சரிக்கை

போராட்டக்காரர்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா களத்தில் இறங்கி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
ஈரான் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதியதாகவும், கற்களை வீசியதாகவும், வாகனங்களை எரித்ததாகவும் உள்ளூர் ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது. சில ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பல்வேறு நபர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமைதியான போராட்டங்களுக்கு எதிராக ஈரான் அரசு வன்முறையை பயன்படுத்தினால், அமெரிக்க அரசு களத்தில் இறங்கி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளா. இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“ஈரான் தனது வழக்கமான பாணியில் அமைதியான போராட்டங்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தி போராட்டக்காரர்களை கொடூரமாக சுட்டுக் கொன்றால், போராட்டக்காரர்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா களத்தில் இறங்கி பதிலடி கொடுப்பதற்கு தயாராக உள்ளது.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






