இந்திய-வங்காளதேச எல்லையில் உஷார்நிலை- பாதுகாப்பு படையினருக்கு விடுமுறை ரத்து

இந்தியாவின் கிழக்கு எல்லை பகுதியில் வங்காளதேசம் அமைந்துள்ளது.
கொல்கத்தா,
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் சுதந்திர போராட்டத்தில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து கடந்த மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இது கலவரமாக வெடித்ததால் 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பின்னர் மாணவர்களுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் ஓரளவு ஓய்ந்து இருந்தது.இந்த சூழ்நிலையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டதை கண்டித்தும், கைதானவர்களை விடுவிக்ககோரியும்,பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரியும் நேற்று முன் தினம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல நகரங்களில் பல்வேறு மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டங்கள், பேரணியில் ஈடுபட்டனர். முக்கிய நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டமும் நடத்தினார்கள். இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.இந்த போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டி விட்டதாக ஆளும் அவாமி லீக் குற்றம் சாட்டியது.
போராட்டத்தின் போது மாணவர்களுக்கும், ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ரங்பூரை சேர்ந்த அவாமி லீக் கட்சி கவுன்சிலர் ஹரதன்ராண் பரசுராம் சுட்டுக்கொல்லபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வங்காளதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரத்தில் இது வரை 14 போலீசார் உள்பட 100 பேர் பலியாகி விட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதனிடையே, நிலமை கையை மீறி போனதால் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது இந்தியாவில் தங்கியிருக்கும் ஷேக் ஹசீனா, இங்கிலாந்தில் அடைக்கலம் கோர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, வங்காளதேசத்தில் இடைக்கால அரசு அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் கிழக்கு எல்லை பகுதியில் வங்காளதேசம் அமைந்துள்ளது. இந்திய-வங்காளதேச எல்லை 5 மாநிலங்கள் வழியாக 4 ஆயிரத்து 96 கி.மீ. தூரம் செல்கிறது. எனவே, வங்காளதேச நிலவரம் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக இரு நாட்டு எல்லையில் தீவிர உஷார்நிலையை எல்லை பாதுகாப்பு படை பிறப்பித்துள்ளது. பாதுகாப்பு படையினருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.