அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறுத்தம்; ஐரோப்பிய யூனியன் அதிரடி


அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறுத்தம்; ஐரோப்பிய யூனியன் அதிரடி
x

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பிரஸ்ஸல்ஸ் ,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது அதிரடியாக வரி விதித்து வருகிறார். மேலும், பல நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பேன் என்று மிரட்டல் விடுத்து வருகிறார். அதேவேளை, அமெரிக்கா விதித்த வரியில் தளர்வை மேற்கொள்ள அந்தந்த நாடுகள் அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேலும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவும் முயற்சித்து வருகின்றன.

இதனிடையே, டென்மார்க் நாட்டின் அங்கமாக உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் திட்டமிட்டுள்ளார். கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லையென்றால் சீனா, ரஷியா கைப்பற்றிவிடும் என அவர் கூறி வருகிறார். ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் உலக அமைதிக்கு கிரீன்லாந்து தங்கள் வசம் இருப்பது முக்கியம் என்று டிரம்ப் கூறி வருகிறார். மேலும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கவில்லையென்றால் கூடுதல் வரிவிதிப்பேன் என்று ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் மிரட்டி வருகிறார். டிரம்ப்பின் பேச்சுக்கு ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்கா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை நீக்குவது, தடையற்ற வர்த்தகம் உள்பட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், கிரீன்லாந்து விவகாரத்தில் வரிவிதிப்பேன் என்று ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் மிரட்டிய நிலையில் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்த பேச்சுவார்த்தையை ஐரோப்பிய யூனியன் நிறுத்தியுள்ளது. வர்த்தக ஒப்பந்தத்த பேச்சுவார்த்தையை நிறுத்துவது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், விரைவில் அமலாக உள்ள அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்த ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. இதன் மூலம் வர்த்தக ஒப்பந்தம் அமலாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

1 More update

Next Story