வங்காளதேச முன்னாள் பிரதமர் மரணம் - இன்று உடல் அடக்கம்

வங்காளதேசத்தின் முதலாவது பெண் பிரதமர் கலிதா ஜியா நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் இன்று நடக்கிறது.
டாக்கா,
அண்டை நாடான வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது 80.
கலீதா ஜியாவின் மறைவைத் தொடர்ந்து, வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இன்று ஒரு நாள் பொது விடுமுறை விடப்படும் என்றும் அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் அறிவித்துள்ளார். கலிதா ஜியாவின் உடல் அடக்கம், இன்று (புதன்கிழமை) வங்காளதேச நாடாளுமன்ற வளாகம் முன்பு டாக்கா மாணிக் மியா அவென்யூவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலிதா ஜியாவின் கணவர் ஜியாவுர் ரகுமான் ஆவார். ராணுவ தளபதியாக இருந்த அவர், பின்னாளில் அதிபர் ஆனார். முதலில், ராணுவ தளபதியின் மனைவியாகவும், அதிபரின் மனைவியாகவும் கலிதா ஜியா அறியப்பட்டார். கடந்த 1981-ம் ஆண்டு, ஜியாவுர் ரகுமான் கொல்லப்பட்ட பிறகு கலிதா ஜியா அரசியலில் நுழைந்தார். அவர் அரசியலுக்கு வந்தது விபத்தாக கருதப்படுகிறது.
ராணுவ புரட்சி மூலம் எர்ஷாத் அதிபரான பிறகு, ஜனநாயகத்தை மீட்க போராடியதில் கலிதா ஜியா முக்கிய பங்கு வகித்தார். 1991-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், முதல்முறையாக பிரதமர் ஆனார். வங்காளதேசத்தின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றார். 1996, 2001 ஆகிய ஆண்டுகளிலும் பிரதமர் ஆனார்.
ஊழல் குற்றச்சாட்டுகளின்கீழ், 2007-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். அவர் எந்த தொகுதியிலும் தோல்வி அடைந்தது இல்லை. அவரது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாதான் முக்கிய எதிரியாக இருந்தார். பிப்ரவரி 12-ந் தேதி நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கலிதா ஜியாவின் தேசியவாத கட்சிதான் முன்னணியில் இருந்து வருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு, ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை வழக்கில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், ஜியா தொண்டு நிறுவன அறக்கட்டளை வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு, ஷேக் ஹசீனா அரசு வெளியேற்றப்பட்டதற்கு மறுநாள், கலிதா ஜியா, ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெற்று விடுதலை செய்யப்பட்டார்.
அடுத்த நாள், பிரமாண்ட பேரணி நடத்தி, கலிதா ஜியா தீவிர அரசியலுக்கு திரும்பினார். கலிதா ஜியா, 3 தடவை பிரதமராக இருந்தபோதிலும், 1996-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றபோது வெறும் 12 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.
அடுத்த ஆண்டு வங்காள தேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலிதா ஜியாவின் மறைவு அக்கட்சிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.






