வெனிசுலாவை அடுத்து இந்த நாடா...? டிரம்பின் எச்சரிக்கையால் பதற்றம்


வெனிசுலாவை அடுத்து இந்த நாடா...? டிரம்பின் எச்சரிக்கையால் பதற்றம்
x

பெட்ரோ உடனடியாக இந்த படுகொலை முகாம்களை மூட வேண்டும். இல்லையெனில் அமெரிக்கா அதனை செய்ய வேண்டி இருக்கும் என டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்காவுக்குள் வெனிசுலா அபாயகர போதை பொருட்களை கடத்துகிறது என்றும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார்.

அவர்கள் குற்றவாளிகளையும், சிறை கைதிகளையும், அவர்களுடைய போதை பொருள் கடத்தல் கும்பல்காரர்களையும் எங்களுடைய நாட்டுக்குள் அத்துமீறி நுழைய செய்கின்றனர். வேறு எந்த நாட்டையும் விட வெனிசுலாவில் இருந்தே லட்சக்கணக்கானோர் எங்களுடைய திறந்த நிலையிலான எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்றனர் என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.

இதனை முன்னிட்டு அந்நாட்டுக்கு எதிராக கடுமையான தடைகளை விதித்து உத்தரவிட்டார். மதுரோவின் சட்டவிரோத ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகையில், நிதி ஆதாரங்களை தொடர்ந்து வழங்க கூடிய சில எண்ணெய் கப்பல்களை நாங்கள் கண்டறிந்து உள்ளோம் என கூறி, அந்நாட்டின் 4 எண்ணெய் நிறுவனங்களுக்கும், அதனுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல்களுக்கும் புதிய தடைகளை விதித்து டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

இதுபோன்ற கப்பல்களையே மதுரோவின் ஆட்சி அதிகம் சார்ந்து இருக்கிறது. அதன் வழியே வருவாயையும் ஈட்டி வருகிறது. அதனை கொண்டு அமெரிக்காவின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிக்கிறது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.

அமெரிக்க நாட்டில் போதை பொருட்களை குவிக்கும் வேலையில் ஈடுபட்டு விட்டு, எண்ணெய் ஏற்றுமதி வழியே லாபம் பெற முயற்சிக்கும் சட்டவிரோத மதுரோவின் ஆட்சியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்க கருவூல துறை மந்திரி ஸ்காட் பெஸ்சன்ட்டும் அறிக்கை வழியே தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறும்போது, நிக்கோலஸ், அவருடைய மனைவி சிலியா புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நிகோலஸ் மீது, அமெரிக்காவுக்கு எதிராக போதை பொருள் கடத்தல் சதி திட்டம், கொக்கைன் இறக்குமதி சதி திட்டம், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுக்கான கருவிகளை பதுக்கி வைப்பதற்கான சதி திட்டம் ஆகிய வழக்குகள் பதிவாகி உள்ளன. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என கூறினார்.

எனினும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் பிற வளத்திற்காக என உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், வெனிசுலாவை தொடர்ந்து மற்றொரு நாட்டின் மீதும் அமெரிக்க ராணுவ நடவடிக்கை பாயுமா? என பார்க்கப்படுகிறது. கொலம்பியா நாட்டின் அதிபரான கஸ்டாவோ பெட்ரோவுக்கும், டிரம்புக்கும் இடையே சமீபத்தில் முட்டல், மோதல் ஏற்பட்டது.

கடந்த செப்டம்பரில் அமெரிக்க மண்ணில் வைத்தே, நியூயார்க் தெருக்களில் நடந்த போராட்டத்தின் ஊடே பேசும்போது, டிரம்பின் உத்தரவுகளை மதிக்காதீர்கள். மனிதகுலத்திற்கான உத்தரவை மதித்து செயல்படுங்கள் என குறிப்பிட்டார். காசா போருக்கு எதிராக அந்த போராட்டம் நடந்தது.

இதனால், அமெரிக்க-கொலம்பிய உறவில் விரிசல் தோன்றியது. பெட்ரோவின் விசாவை ரத்து செய்ய போகிறோம் என அமெரிக்கா அறிவித்தது.

இதன்பின்னர் வெனிசுலா மற்றும் கொலம்பியா மீது டிரம்ப் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளார் என அமெரிக்க செனட்டரான லிண்ட்சே கிரஹாம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஏனெனில் அந்த இரு நாடுகளும் போதை பொருள் பயங்கரவாதிகளை வைத்திருக்கின்றன. அமெரிக்காவுக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளன என்றும் லிண்ட்சே கூறினார்.

டிரம்ப், கடந்த அக்டோபர் இறுதியில், இந்த படுகொலை முகாம்களை பெட்ரோ உடனடியாக மூட வேண்டும். இல்லையெனில் அமெரிக்கா அதனை செய்ய வேண்டி இருக்கும் என கூறினார்.

டிசம்பர் தொடக்கத்தில், பெட்ரோ கொக்கைனை தயாரித்து வருகிறார். அதனால், உங்கள் நாட்டு விவகாரத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது என அப்போது காட்டத்துடன் கூறினார்.

இந்த சூழலில் வெனிசுலா அதிபர் மதுரோ கைது நடவடிக்கை நடந்துள்ளது. இதனால், அடுத்து பெட்ரோ கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

1 More update

Next Story