கனடாவில் துப்பாக்கி சூட்டில் பலி: இந்திய மாணவி சாவில் வாலிபர் கைது

சம்பவத்தின்போது மாணவி பஸ்சை விட்டு இறங்கியபோது கார்களில் வந்த ஒரு கும்பல் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
ஒட்டாவா,
கனடா மொகாரில் உள்ள ஒரு கல்லூரியில் இந்தியாவை சேர்ந்த ஹர்சிம்ரத் ரந்தாலா என்ற மாணவி பிசியோதெரபி 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி இவர் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று விட்டு பஸ்சில் தனது இருப்பிடத்துக்கு திரும்பினார்.
ஜேம்ஸ் தெரு மற்றும் சவுத் பெண்ட் சந்திப்பில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் அவர் பஸ்சை விட்டு கீழே இறங்கினார். பின்னர் அவர் பஸ் நிறுத்தம் அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவரது உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.
உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நடந்த அன்று அவர் பஸ்சை விட்டு இறங்கியபோது கார்களில் வந்த ஒரு கும்பல் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த சண்டையின்போது இந்த கும்பலை சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் தவறுதலாக இந்திய மாணவி ஹர்சிம்ரத் ரந்தாலா மீது பாய்ந்ததால் அவர் இறந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஹாமில்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில், ஒன்ராறியோவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி அருகே ஜெர்டைன் பாஸ்டன் (வயது 32) என்ற வாலிபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். விசாரணையில் துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவி பலியான சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






