பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 60-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கைது: இஸ்ரேல்


பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 60-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கைது:  இஸ்ரேல்
x

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், தேடப்படும் பட்டியலில் உள்ள பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 60-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கைது செய்துள்ளது.

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

ஓராண்டாக நடந்த மோதலில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ந்தேதியுடன் முடிவடைந்தது.

முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு ஹமாஸ் அமைப்பு விருப்பம் தெரிவித்து வருகிறது. இதன்படி, காசாவில் இருந்து மீதமுள்ள பணய கைதிகள் விடுவிக்கப்படும் சூழல் ஏற்படும்.

எனினும், முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அதனடிப்படையில் இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என இஸ்ரேல் விருப்பம் தெரிவித்து அதனை வலியுறுத்தி வருகிறது. இது நடைபெறாத சூழலில், காசாவுக்கான நிவாரண பொருட்களை நிறுத்தி உள்ளது.

தொடர்ந்து, பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர்களை தேடும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வாரத்தில் ஜூட் மற்றும் சமரியா பகுதிகளில் நடத்திய வேட்டையில், தேடப்படும் பட்டியலில் உள்ள பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 60-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டு உள்ள செய்தி தெரிவிக்கின்றது.

அவர்களிடம் இருந்து எண்ணற்ற ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பகுதிகளில் இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது. இவர்களில் 40 சதவீதத்தினர் ஹமாஸ் அமைப்பினருடன் தொடர்பில் உள்ளவர்கள் ஆவர்.

1 More update

Next Story