பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

என்கவுன்டர் நடந்த பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

லாகூர்,

பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாதுகாப்புப்படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் தெஹ்ரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பாகும். அதேவேளை, இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பனு மாவட்டத்தில் வாரிஸ்தான் அருகே தெஹ்ரிக் இ தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று இரவு அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்தனர். பாதுகாப்புப்படையினர் நடத்திய பதிலடி துப்பாக்கி சூட்டில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுன்டர் நடந்த பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக பெஷாவர் நகரில் தெஹ்ரிக் இ தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com