23 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; பாகிஸ்தான் ராணுவம் அதிரடி


23 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; பாகிஸ்தான் ராணுவம் அதிரடி
x

ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 23 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் தடை செய்யப்பட்ட டெரிக் இ தலீபான் பாகிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆதிக்கம் காணப்படுகிறது. அங்குள்ள குர்ரம் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை ரகசிய தகவல் அளித்தது. அதன்பேரில், அப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது.

அப்போது, ராணுவத்துக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. இதில், 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, அதே பகுதியில் தலீபான் பயங்கரவாதிகளில் மற்றொரு குழுவினர் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்தது. அதைத்தொடர்ந்து, அப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் களம் இறக்கப்பட்டது.அங்கு நடந்த துப்பாக்கி சண்டையில், மேலும் 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய திரா பள்ளத்தாக்கில் ஒரு வீட்டின் அருகே பீரங்கி குண்டு விழுந்தது. அதில் ஒரு ஆணும், அவருடைய 4 வயது மகனும் பலியானார்கள். தெற்கு வசிரிஸ்தான் பிர்மல் தாலுகாவில் நடந்த தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 16 வெடிகுண்டுகளை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து அகற்றினர். லக்கி மர்வத் என்ற இடத்தில், தலீபான் இயக்க தளபதி ஒருவர் உயிருடன் பிடிபட்டார்.

1 More update

Next Story